தம்பிதுரை ஆட்டம் இனி குளோஸ் - சிடுசிடுத்த செந்தில் பாலாஜி

Senthil Balaji dares Thambidurai

திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது உறுதியாகிவிட்டது. கொங்கு பெல்ட்டில் இனி தம்பிதுரை அஸ்திவாரம் காலி என திமுக பொறுப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம் செந்தில் பாலாஜி.

கரூரை மையமாக வைத்து அரசியல் நடத்தி வருகிறார் தம்பிதுரை. தொகுதிக்குள் அரசு மருத்துவமனை கொண்டு வருவது, தொகுதி மக்களின் குறைகளைக் களைவது என சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டெல்லியில் இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சிக்காக எந்த மாவட்டத்தில் இருந்தாலும் சரி தொகுதி மக்களிடம் குறை கேட்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சசிகலா கையில் இருந்து அதிகாரம் பிடுங்கப்பட்ட பிறகு முதல்வர் பதவிக்கு அதிகம் ஆசைப்பட்டவர் தம்பிதுரை.

இதற்காக பாஜக நிர்வாகிகளிடம் பலமுறை பேசினார். கேரள ஆளுநர் சதாசிவத்தின் அருள், எடப்பாடி பழனிசாமி மீது விழுந்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டார் தம்பிதுரை.

சமூகரீதியாகவும் தொகுதிக்குள் நல்ல செல்வாக்குடன் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் மோதல் வந்தாலும் அதிமுகவை விட்டுக் கொடுக்காமல் அரசியல் செய்து வருகிறார்.

'அ.தி.மு.க.வை பார்த்து அணையும் விளக்கு என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல. எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு' என்ற வார்த்தை, அவரது புகழ்பெற்ற விமர்சனங்களில் ஒன்று.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கழக செல்வாக்கை ஆராய்ந்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.

எப்படிப் பார்த்தாலும் கொங்கு பெல்ட்டில் எடப்பாடி அண்ட் கோவின் ஆதிக்கத்தை அவரால் உடைக்க முடியவில்லை. இதை உடைத்தால் மட்டுமே திமுக கரையேறும் என்பதால், அந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலரைக் கழகத்துக்குள் ஐக்கியமாக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாகத்தான் செந்தில் பாலாஜி வரவழைக்கப்பட்டிருக்கிறார். டிசம்பர் இறுதிக்குள் கொங்கு வட்டாரத்தில் இருந்து டிடிவி தரப்பில் முக்கிய தலைகளைக் கொண்டு வர உள்ளனர்.

அடுத்ததாக, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனை குறிவைத்திருக்கிறார்களாம். தினகரனை நம்பிப் பலனில்லை. அதிமுகவுக்கு பேஸ் வேல்யூ இல்லை. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என அவரைக் கரைக்கும் வேலைகள் நடக்கிறதாம்.

அதேவேளையில், இணைப்பு முயற்சி நடந்த நேரத்தில் ஸ்டாலினிடம் பேசிய செந்தில் பாலாஜி, 'கரூரில் இனி தம்பிதுரை ஆட்டம் செல்லாது. அவரது கொட்டத்தை அடக்குவேன். கரூரில் திமுக வெற்றி பெறுவதற்கு நான் கியாரண்டி' என குஷியோடு விவரித்தாராம்.

-அருள் திலீபன்

You'r reading தம்பிதுரை ஆட்டம் இனி குளோஸ் - சிடுசிடுத்த செந்தில் பாலாஜி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ தொடர்ந்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்