அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞர் கொலை - வெடித்தது போராட்டம்

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மினியாபொலிஸ் நகருக்கு அருகே புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி கார் ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் காரை ஓட்டி வந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டான்ட் ரைட் என்ற இளைஞரை கைது செய்ய முயன்றனர். டான்ட் ரைட் தான் எந்த தவறும் செய்யவில்லை என போலீசிடம் கூறிவிட்டு காரை இயக்க முயன்றுள்ளார். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி குண்டு காயத்துடன் டான்ட் ரைட் காரை சிறிது தூரம் ஓட்டி சென்றார். பின்னர் அந்த கார் மற்றொரு கார் மீது மோதி நின்றது. இதையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது டான்ட் ரைட் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் காரில் பயணித்த பெண்ணொருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தார். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


கருப்பின வாலிபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து போராட்டக்காரர்கள், புரூக்ளின் சென்டர் நகரில் உள்ள போலீஸ் தலைமையகம் முன்பு திரண்டு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்கள் மீது கற்களை வீசினர். இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மினசோட்டா மாகாண ஆளுனர் டிம் வால்ஸ், புரூக்ளின் சென்டர் நகரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் அந்த நகரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜார்ஜ் பிளாய்டு படுகொலையால் வெடித்த போராட்டங்கள் இன்னும் அடங்காத நிலையில், மற்றொரு கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞர் கொலை - வெடித்தது போராட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் அதிகரிக்கும் வேலை இழப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்