திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.ஆனால் இந்த ஆண்டில் முதல் முறையாக 10 நாட்களுக்கு 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக இணையதளம் மூலம் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக வெளிமாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. திருப்பதியில் 5 மையங்களில் 50 கவுண்டர்கள் மூலம் திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மட்டும் ஆதார் அட்டையைக் காண்பித்து இலவச தரிசன டிக்கெட்டுகள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தவகையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 24 ம் தேதி முதல் வழங்கப்படும் எனvum அறிவிக்கப்பட்டது.
வெளிமாநில பக்தர்கள் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் 24 தேதி வரைக்கான டிக்கெட்டுகள் நேற்று பிற்பகலிலேயே மூன்று நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுவிட்டது. இதனால் இன்று இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்களுக்கு ஜனவரி 4 ம் தேதிக்கு பிறகே இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஏமாற்றமடைந்த பக்தர்கள் கருடாழ்வார் சந்திப்பு அருகே தேவஸ்தானத்திற்கு எதிராகக் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் தற்போது எதுவும் செய்ய முடியாது என்று கூறி பக்தர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பக்தர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .