பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. அதே திட்டத்தில் பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோருக்கும் புதிதாகப் பங்களாக்கள் கட்டப்பட உள்ளன.
இதற்காக மத்திய பொதுப்பணித்துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகள் செய்துள்ளது. அதன் அடிப்படையில் பிரதமருக்குப் பிரம்மாண்டமான பங்களா கட்டப்பட உள்ளது.
பிரதமர் பங்களாவிற்காக 30,351 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்படும். பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு இரண்டரை ஏக்கர் நிலத்தில் வீடு கட்டப்படும். பிரதமரின் அலுவலகமும் இந்த பங்களாவிலேயே இயங்கும். இதே போல் துணை ஜனாதிபதிக்கு 15 ஏக்கரில் பங்களா கட்டவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.