தாய் பிள்ளை செண்டிமெண்டாக மாறிய பிக் பாஸ் சனம் பாலாஜியை காதலிக்கிறாரா?? பிக் பாஸின் 25வது நாள்..

by Mahadevan CM, Oct 29, 2020, 12:48 PM IST

முந்தின நாள் தொடர்ச்சி. பாலாவை அர்ச்சனா, வேல்ஸ், ரியோ மூவரும் சூழ்ந்து கேள்வி கேட்டுகிட்டே இருந்தாங்க. பாலா சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கு அர்த்தம் மாறிட்டே இருந்தது. ஒரு ஆள்,, ஒரு கூட்டத்துக்கு முன்னாடி பேசும் போது பொதுவா இப்படித்தான் நடக்கும். சாதாரணமா சொல்லப்படும் வார்த்தைக்கு கூட வீரியமான அர்த்தங்கள் எடுத்துக் கொள்ளப்படும். வழக்கமான விவாதங்களில் நடப்பது போல் பிரச்சினையை மறந்துவிட்டு நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? சண்டையாக டைவர்ட் ஆனது. நான் கேப்டன், நான் சொல்றதை நீ கேட்டே ஆகனும்னு அர்ச்சனா சொன்ன போது, வழக்கமான வறட்டு பிடிவாதத்தோட "இப்படி அதிகாரமா சொன்னீங்கன்னா நான் கேக்க மாட்டேன்னு" பாலா சொன்னாரு. அவரு சொன்னது "கேப்டன் சொன்னா கேக்க மாட்டேன்" என்றே அங்கே திருப்பி சொல்லப்பட்டது. விவாதங்களில் நாம் சொல்லும் ஒரு சில வார்த்தைகள் விடுபடும் போது, அல்லது அந்த வார்த்தைகளுக்கு தவறான அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படும் போது, மொத்த விவாதாமும் வழிதவறி சென்று விடும் அபாயம் இருக்கிறது. சின்ன சண்டை பெருசா முடிய பெரும்பாலும் அங்க சொல்லப்படுகிற வார்த்தைகள் தான் காரணம்.

பாலாவும் அர்ச்சனாவும் பேசும் போது ரியோவும், வேல்ஸும் ஒரு பக்கம் கத்திட்டு இருந்தாங்க. வேல்ஸ் கூட க்ளீனிங் டீம் கேப்டன். இந்த பிரச்சினைல சம்பந்தபட்டவர். அதனால அவர் பேசறதுக்கு உரிமை இருக்கு. ரியோவை பொறுத்தவரைக்கும் அவருக்கும் இந்த பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையே இல்லாம மூக்கை நுழைச்சு கத்தினது துளி கூட அவசியமில்லாதது. மத்த எல்லாரும் சும்மா இருக்கும் போது ரியோ செஞ்சது அப்பட்டமான நாட்டாமைத்தனம். ரம்யா, சம்மு ரெண்டு பேரும் பிரச்சினையை கொஞ்சம் தணிக்கறா மாதிரி, பாலாவோட தவறை சுட்டி காட்டினாங்க. பாலாவுக்குமே நாம கொஞ்சம் எல்லை மீறிட்டோம்னு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். வெளிய போனவன் கண்ணு கலங்கி கண்ணிர் விட்டது கஷ்டமா இருந்தது.

அந்த பக்கம் அர்ச்சனாவை கட்டி பிடிச்சு தன் சப்போர்ட்டை தெரிவிச்சுட்டு இருந்தாங்க ரியோவும், சோமும். வேல்ஸ் மாதிரி நடிச்சு காட்டி கிண்டல் செஞ்சுட்டு இருந்தார் ரியோ. பிரச்சினை தீவிரமா இருக்கும் போது வேல்ஸை பேசவே விடலை அர்ச்சனா. வேலு நீ சும்மா இரு, நீ சும்மா இருனு அதட்டிட்டே இருந்தாங்க. இது இப்ப ஒன்னும் தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வேல்ஸுக்கு இதெல்லாம் புரியும். கூட்டமா சேர்ந்து பாலாவுக்கு எதிரா பேசினது, பாலாவுக்கு சப்போர்ட்டா யாருமே பேசாதது இந்த ரெண்டுமே பாலாவை பாதிச்சுருக்கும்னு நினைக்கிறேன். பாலா கூட ப்ரெண்ட்ஷிப்ல இருக்கறது எல்லாரும் சின்னப்பசங்க தான். அவங்க சொல் அங்க எடுபடாது. சுரேஷ் நடுவுல பேசிருந்தா கண்டிப்பா எல்லாரும் கேட்ருப்பாங்க. ஆனா அவர் தலையிடவே இல்லை. தன்னை கார்னர் செய்யறாங்கனு கமல் சார் முன்னாடி சொன்னவரு, அதே மாதிரி இன்னொருத்தர் கார்னர் செய்யப்படும் போது குரல் கொடுக்காதது வியப்பு தான். இல்ல, பிரச்சினை நடக்கட்டும், முகமூடி கிழியட்டும்னு அவர் எப்பவும் சொல்றதுக்கு ஏத்தா மாதிரி அமைதியா இருந்தாரானு தெரியல.

லைட்டெல்லாம் ஆப் செஞ்சதுக்கு அப்புறமும் எல்லாரும் கூடி பேசிட்டு இருந்தாங்க. அப்ப தான் பாலாவுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாரு சுரேஷ். அர்ச்சனா கிட்ட போய் பேசுனு சொல்லிட்டு இருந்தார். வெளிய அர்ச்சனாவும் இதை பத்தி பேசிட்டு இருந்தாங்க. அப்பவும் பாலாவை குழந்தை மாதிரி தான்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஒருவழியா நாம ப்ரமோல பார்த்த அந்த காட்சி வந்தது. அர்ச்சனா, அம்மு, சோம், பாலா நாலு பேரும் வெளிய உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. வந்த நாள்ள இருந்து நான் உன்னை என் குழந்தை மாதிரி தான் பார்த்துட்டு இருக்கேன் எனக்கு கிடைக்காத ஒரு மகனை உங்கிட்ட தேடிட்டு இருக்கேன். இதெல்லாம் சத்தியமான உண்மை. ஆனா உனக்கு என்னை பிடிக்கலனு எனக்கு தெரியுது. அதனால என்னோட எண்ணம் மாறாது. நான் எப்பவும் உன்னை என் பிள்ளையா தான் பார்க்கறேன். அர்ச்சனா உடைஞ்சு அழுதுட்டே பேசவும், பாலாவும் கலங்கிட்டான். இதுக்கு முன்னாடி இப்படி எதுவும் நடக்கல, எனக்கு இது பழக்கமில்லைனு சொல்லவும் அந்த வார்த்தை போதுமானதா இருந்தது அர்ச்சனாவுக்கு. அவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு எல்லாரும் விலகிப் போக, அங்க பின்னணி இசை, பாடல் இல்லாம ஒரு தாய்-மகன் பாசக்காட்சிகள் நமக்கு கிடைச்சது.

இதே மாதிரி ஒரு செண்டிமெண்ட் காட்சி சினிமாவுல, நாடகத்துல பார்த்தோம்னா நாம கண்டிப்பா செண்டிமெண்ட்ல கரஞ்சிருப்போம். அது நடிப்பு மட்டும் தான்னு நமக்கு நல்லாவே தெரிஞ்சாலும், நம்மளையும் அறியாம அந்த காட்சிக்கும் கண்ணீர் விட்டு அழுதுருப்போம். ஆனா ஒரு ரியலிட்டி ஷோல இந்த மாதிரியான காட்சியை பல பேரால ஏத்துக்க முடியாம போய்ருக்கலாம். ஆனா பேரும்பாலான ரசிகர்கள் இன்னும் செண்டிமெண்ட் விரும்பிகள் தான். வந்த 10 நாள்ல இதெல்லாம் சாத்தியமானு கேக்கலாம். இந்த உணர்வு எல்லாருக்கும் பொதுவானது. நாம புதுசா ஒரு வேலைக்கு போவோம். அங்க ஏகப்பட்ட பேர் இருந்தாலும், ஒரு சிலர் கிட்ட மட்டும் நமக்கு கூடுதல் அட்டாச்மெண்ட் வரும். ரெண்டாவது நாள் இவந்தாண்டா நம்மாளுனு ஒன்னா டீ குடிக்க போவோம், ஒன்னா லன்ச் சாப்பிடுவோம். அங்க அத்தனை பேர் இருந்தும் அந்த ஒருத்தர் கிட்ட மட்டும் நம்ம பர்சனல் விஷயமெல்லாம் ஷேர் பண்ணிப்போம். இதெல்லாம் சில நாள்ல நடந்துரும்.

பொதுவா சினிமால நடிக்கறவங்க சாதாரண உணர்வுகளை கொஞ்சம் மிகைப்படுத்தி நடிப்பாங்க. டீவியும் அதே மாதிரி தான். இந்த மாதிரி ரியலிட்டி ஷோல வரவங்களும் தங்களோச உணர்வுகளை அதீதமா வெளிப்படுத்தறவங்களா இருப்பாங்க. அது சிரிப்பு, அழுகை, கோபம், பாசம் எந்த உணர்வா இருந்தாலும் அதை கொஞ்சம் ஜாஸ்தியாவே வெளிப்படுத்துவாங்க. ஆனா பிக்பாஸ் பொறுத்தவரைக்கும் இங்க வரும் கேரக்டர்கள் மேல நாம நம்மளை பொருத்தி பார்த்துக்கறோம். அதுக்கு மிக முக்கியமான காரணம், அவங்களோட கடந்த கால வாழ்க்கை, சோகங்கள், துயரங்கள், பிரச்சினைகள், ஏமாற்றங்கள், வலிகள் இது எல்லாமே நமக்கு தெரிய வருது. அப்போ நம்ம வாழ்க்கையோட அவங்களை நாம ஒப்பிட்டு பார்த்துக்கறோம். அந்த ஒப்பீடு வரும் போதே அவங்களும் நம்மளை மாதிரி தான் என்ற எண்ணம் நமக்குள்ள வந்துடும். எல்லா சீசன்லேயும் உள்ள இருக்கற கண்டஸ்டண்ட்ஸ் நமது பிரதிபலிப்புகள் தான்னு அவங்களும் விளம்பரம் பண்றாங்க. அட இவங்களும் நம்மளை மாதிரி தான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், அந்த கேரக்டர்கள் அதீதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அதை நம்மால ஏத்துக்க முடியல. இந்த உணர்வுகள் போலினு கூட சிலர் சொல்லுவாங்க. காரணம் யதார்த்தத்துல நாம இப்படி நடந்துக்க மாட்டோம்.

போன சீசன்ல முகின், தர்சன் கதையை கேட்டு, நான் இனிமே நண்பர்களுக்காக விளையாடப் போறேன்னு சொன்ன கவினை, இளைஞர்கள் அப்படியே ஏத்துகிட்டாங்க. அந்த முடிவு எடுத்தது 15 நாளுக்குள்ள தான். சேரனை பார்த்து அப்பா மாதிரி இருக்குனு லாஸ்லியா சொன்ன போது, ஆரம்பத்துல சிலர் கிண்டல் செஞ்சது கூட நடந்தது. ஆனா லாஸொட அப்பா வந்த போது தான், லாஸ் நினைச்சதுல எந்த தப்பும் இல்லைனு நமக்கு புரிஞ்சுது. ஆரம்பத்துல சந்தேகபட்டவங்க கூட அந்த பாசம் போலியானதில்லைனு பின்னாடி புரிஞ்சுகிட்டாங்க. அதே மாதிரி தான் இதுவும். பாலா தன்னோட கதையை சொல்லும்போது அர்ச்சனா ஹவுஸ்ல இல்லை. வெளில இருந்து தான் பார்த்தாங்க. பாலாவை தன் மகனா பீல் செய்யறதுக்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கலாம். இப்போதைக்கு நமக்கு முழுக்கதையும் தெரியாததால, இந்த உறவை பத்தி எந்த ஒரு முடிவுக்கும் வராம இருக்கறது தான் சரினு தோணுது.

நாள் 25

காலையில பாட்டுக்கு வழக்கம் போல கும்பலா பர்பாமன்ஸ் செஞ்சாங்க. எந்த பாட்டு போட்டாலும் ஷிவானி ஒரே ஸ்டெப் தான் போடுது. தங்கமே உன்னை தான் தேடி வந்தேன்னு பாட்டு. டாஸ்க் சம்பந்தபட்டதாம்.

அவ face u அட அட அடடடா
அவ ஷேப்பு அப்பப்பப்பப்பா
மொத்தத்துல ஐய்யய்யயய்யோ
அப்படினு சம்முவை பார்த்து நான் பாடலை. ஆனா இது நடந்துருமோனு பயமாருக்கு....

நேத்து எடுத்த தங்கத்தை எடை போடச் சொன்னாரு பிக்பாஸ். பாலா தான் அதிக தங்கம் எடுத்திருந்தான். அடுத்து ரம்யானு நினைக்கிறேன். லிவிங் ஏரியால எல்லாரும் உக்காந்திருக்க, ஒரு வித்தியாசமான அறிவிப்பு கொடுத்தாரு பிக்பாஸ். அதாவது ஹவுஸ்மேட்ஸ் 3 டீமா பிரியனும். ஒரு டீம்ல மினிமம் 4 பேர்லேர்ந்து 8 பேர் வரைக்கும் இருக்கனும். டீம் பிரிஞ்சதுக்கு அப்புறம் எந்த டீம் கிட்ட மொத்தமா அதிக தங்கம் இருக்கோ, அவங்களுக்கு விசேஷ சக்திகள் கிடைக்கும்.

இதை கேட்ட பாலா தங்கம் எடுக்க போன டீமை அப்படியே வச்சுக்கலாம்னு பாலா ப்ளான் பண்றாரு. ஆனா அதுக்குள்ள அர்ச்சனா, ரியோலாம் சேர்ந்து 8 பேர் சேர்ந்த டீம் பார்ம் பண்ணிட்டாங்க. குறைந்தபட்சம் 3 டீம் பார்ம் செய்ய வேண்டி இருந்ததால நிறைய குழப்பங்கள். ரம்யா தனி டீம் பார்ம் செய்ய, சுரேஷ் தமைமையில ஒரு டீம் பார்ம் ஆக, அர்ச்சனா டீம்ல சேர்ந்தாரு பாலா. அங்க போறதுக்கு முன்னாடி சுரேஷ், கேப்பி, சம்மு கிட்ட "நான் புது டீம் பார்ம் பண்றேன்ன்னு" சொல்லிட்டு போனது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆக்சுவலா பாலா எந்த டீம்ல இருந்தாலும் ஜெயிச்சுருக்க வாய்ப்பிருந்தது.

ஒரு வழியா 3 டீம் சேர்ந்ததுக்கு அப்புறம், அந்த டீம்ல உள்ள தங்கத்தை கணக்கு போட்டு, பாலா+அர்ச்சனா டீம் வின் பண்ணினதா அறிச்சாரு பிக்பாஸ். ஜெயிச்ச டீமுக்கு பரிசா, அவங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம். வீடு முழுவதும் அவங்க கட்டுபாட்டுல போகுது. அதே மாதிரி விதிகளையும் அவங்களே உருவாக்கிக்கலாம். ஜெயிச்ச டீம் ஒன்னா சேர்ந்து ஜாலியான ரூல்ஸ்லாம் போட்டுட்டு இருந்தாங்க. அர்ச்சனா, சோம்லாம் சாப்டுட்டு இருக்கும் போது ஷிவானியை கூப்பிட்டு டான்ஸ் ஆட சொன்னாங்க. ரம்யா பாட, ஷிவானி ஆட....

உள்ள சனமை டீஸ் பண்ணிட்டு இருந்தான் பாலா. சின்னப் பசங்க எல்லாரையும் கீழ உக்கார வச்சு ரூல்ந் பத்தி பேசிட்டு இருந்தாங்க. நடுவுல அனிதா தூங்க அதுக்கு தண்டனை கொடுத்தாங்க. அதன்படி ராஜா மாதிரி ட்ரெஸ் பண்ணிருந்த ரியோவோட துணியை பிடிச்சுட்டு பின்னாடியே ஓடிட்டு இருந்தாங்க அனிதா.

இதான் சாக்குனு ஷிவானியை பக்கத்துல உக்கார வச்சு ஊட்டி விட சொல்லிட்டு இருந்தான் பாலா.. அப்பனு பார்த்து இந்த டாஸ்க் தற்காலிகமா நிறுத்தப்படுகிறதுனு சொல்லவும், ரியோவை புரட்டி எடுத்தாங்க நிஷாவும், அனிதாவும். ரமேஷ துரத்த அவரும் தலை தெறிக்க ஓடினாரு. இந்த சீசனோட ஜாலி மொமண்ட்ஸ்ல ஒன்னு. இந்த வாரம் கொஞ்சம் சுவாரஸ்யமாவே போகுது. பார்ப்போம்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை