ஆண்டவர் வருகை.. வீட்டுக்குள் இருக்கும் அரசியலை பேசிய கமல்.. பிக் பாஸின் 28வது நாள்..

by Mahadevan CM, Nov 1, 2020, 11:16 AM IST

ஆண்டவர் தினம். ஏதோ ஒரு கமெனி யூனிபார்ம் மாதிரி ஒரு ட்ரெஸ் போட்ருந்தாரு. அந்த அணிந்திருந்த உடையின் துணி நெசவாளர்களின் உழைப்பில் விளைந்தவை. அதில் ஏற்றியிருக்கும் சாயம் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் செய்தியாக சொன்னார். வீட்டுக்குள்ள அரசியல் இருக்குனு சொல்லிட்டு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் பார்க்க சொல்லிட்டாரு.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்

மிட்நைட்ல இருந்து ஆரம்பிக்குது. ரியோ, ரமேஷ், அர்ச்சனா, சோம், நிஷா எல்லாரும் ஒரே பெட்ல உக்காந்து பேசிட்டு இருக்காங்க. சோம்க்கு தலை பிடிச்சுட்டு இருக்காங்க அர்ச்சனா. அப்ப நிஷா மேல கோபபட்டு எந்திரிச்சு போறாரு ரமேஷ். பேசிட்டு இருக்கும் போதே ரமேஷை மிதிச்சுருக்கு. விளையாட்டுத்தனமா செஞ்சது வினையாகிடுச்சு. காலை தாரை தப்பட்டை பாட்டு. வழக்கமா 8 மணிக்கு போடற பாட்டு நேத்து 9.30க்கு போட்டாங்க. என்ன காரணமா இருக்கும். யாருக்கும் ஆடறதுக்கே மூடு இல்லை. என்னவோ கைய காலை அசைச்சுட்டு இருந்தாங்க. இந்த சம்முவும் ரம்யாவும் பெட்ல உக்காந்து போட்ட ஆட்டம், க்டவுளே கடவுளே.....

இன்னிக்கு நாமினேஷன் நாள்ங்கறதால அதுல இருக்கறவங்க பேக் பண்ணிட்டு இருந்தாங்க. சோம் பேக்கிங்ல ரியோவும், அர்ச்சனாவும் உதவி செஞ்சுட்டு இருந்தாங்க. அப்ப ஒரு சாக்லேட் மறைச்சு வச்சுருந்ததை கண்டுபிடிச்சு சோமை விசாரிச்சுட்டு இருந்தாங்க. இங்க வந்த முதல் வாரத்துல ஒருத்தர் கொடுத்தது, வெளிய போற நிலைமை வந்தா அவங்களுக்கு திருப்பி கொடுத்துட்டு போகனும்னு வச்சுருக்கேன்னு சோம் சொன்னது "அட" போடக்கூடிய விஷயம். அதுக்கப்புறமும் அதை பத்தி நோண்டி நோண்டி கேக்கவும், சாக்லேட் கொடுத்தது ரம்யாதான்னு சொல்றாரு சோம். எலேய் இவன் 90'ஸ் கிட்ஸ்ரா... சாக்லேட், சாக்லேட் பேப்பர்லாம் சேர்த்து வச்சுட்டு இருக்கான். 96 ராம் மாதிரி, இவன் 96-சோம்....

அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் அதைவச்சே கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப கூட "நான் வடிச்சு கொட்டறேன்னு" அர்ச்சனா சொன்னது அதிகமா கவனிக்கபட்டிருக்கும்னு நினைக்கிறேன். அடுத்த வாரத்துல, அர்ச்சனாவை நாமினேட் செய்யப் போறாங்க. "ஏண்டா வெண்ணெய்களா, நான் உங்களுக்கு சோத்தை வடிச்சு கொட்டுவேன், அதை தின்னுட்டு, என்னையே நாமினேட் பண்றிங்களானு" கேக்க போகுது. மார்க் மை வேர்ட்ஸ். ஒரு பக்கம் புகார் பெட்டில, கேப்டன் செயல்பாடுகள் பத்தி எழுதி போட்டுட்டு இருந்தாங்க. ஆண்டவர் எண்ட்ரி. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்பவர்கள் பத்தி கமல் சார் விமர்சனம் பண்ணினார்.. இது ஸ்கிரிப்ட்டுனு சொல்றாங்க. இப்படியெல்லாம் ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்கறவங்க யாராவது இருந்தா சொல்லுங்க, நான் அவங்களை வாத்தியாரா ஏத்துக்கறேன்னு சவால் விட்டார்.

அகத்திற்குள் அகம்.

போன வாரம் எல்லாருமே நல்ல பர்பாமன்ஸ் கொடுத்ததா பொதுவா பாராட்டினார். அடுத்து நேரடியா விஷயத்துக்குள்ள போய்ட்டாரு. மங்கலகரமா ஆரம்பிப்போம்னு சொல்லி அனிதா பேசின "சுமங்கலி" மேட்டரை எடுத்த போது அனிதா முகத்துல பிரகாசம். இந்த விஷயத்துல வீட்ல இருக்கும் பெண்களின் கருத்து என்னனு கேக்கவும் ஒவ்வொருத்ததா சொன்னாங்க. அனிதா கருத்து சரியானது, ஆனா பேசின இடம் தப்புனு பெரும்பாலானவங்க சொன்னாங்க. அனிதா பேசினதும் சரி, அவங்க பேசின இடமும் சரினு அடிச்சு சொன்னது ஷிவானி மட்டும் தான். அடிக்கடி கமல் சார் கிட்ட குட் வாங்குது இந்த பொண்ணு. இறுதில கமலும் அதையே சொன்னார். அனிதாவுக்கு பெரிய ரிலீப். கொஞ்சம் அழுகையோட சிரிப்பும் வந்தது. பெரியார் இருந்திருந்தா பாராட்டி இருப்பார்னு சொன்னது கமல் டச்.

சுரேஷ் கிட்ட விளக்கம் கேக்கும் போதே, அந்த கேரக்டர்ல இருந்து (டாஸ்க்ல கிராமத்து கேரக்டர்) பேசிட்டீங்களானு ஒரு ஹிண்ட்டோட கேள்வி கேக்கவும், சுரேஷ் அதை கெட்டியா பிடிச்சுட்டாரு. உண்மை என்னான்னா இந்த மாதிரியான பிற்போக்குத்தனமான எண்ணங்கள், நம்மையும் அறியாம நம்ம ஆழ் மனசுல இருக்கு. கமல் சார் சொன்னா மாதிரி அது விதைக்க்ப்பட்டிருக்கு. ஒரு வழியா சுரேஷை சேதாரம் இல்லாம காப்பாத்தி விட்டாரு.

பாலா - அர்ச்சனா - அன்பு - ஸ்ட்ராட்டஜி

அடுத்த டாபிக். தூங்கினதுல இருந்து பாலா விளக்கம் கொடுக்க, அர்ச்சனா அதுக்கு பதில் விளக்கம் கொடுக்க, கொஞ்சம் லெந்தா தான் போச்சு. தூக்கத்துல இருந்து எழுப்பாதீங்கனு அர்ச்சனாவுக்கும், வேலையை முடிச்சுட்டு தூங்குங்கனு பாலாவுக்கும் "மய்யமா" தீர்ப்பு சொன்னாரு. பாலா + அர்ச்சனாவோட செண்டிமெண்ட் எடிசன் பத்தின பேச்சு வந்தது. பாலாவோட கதையை வெளிய இருந்து கேட்டு வந்ததால அர்ச்சனாவுக்கு அப்படி தோணிருக்கலாம்னு கமல் சார் சொன்னதை நாமும் இங்கே ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம்.. அன்பு கிடைச்சா எடுத்து பாக்கெட்ல போட்டுக்கங்க, அது ஸ்ட்ராட்டஜியா இருந்தா கூட பரவால்லனு பாலாவுக்கு அட்வைஸ் பண்ணினது, கமல் சார் பாஷைல டிப். அதே மாதிரி பாலாவோட திமிர் + ஆணவம் + வெளிப்படைத் தன்மை பத்தியும் பாலாவுக்கு கொடுத்த டிப் கொடுத்தாரு. அது பாலாவுக்கு புரிஞ்சுருக்கும்னு நம்புவோம்.

இடைவேளைல அர்ச்சனா, சோம், ரியோ பேசறாங்க. "அன்பு ஸ்ட்ராட்டஜியா இருந்தாலும் ஏத்துக்குங்க"னு கமல் சார் சொன்னதை சுட்டிக் காட்டி, அனபு, ஸ்ட்ராட்டஜினு எங்கேயோ பேசிருக்கான், அதனால தான் அந்த வார்த்தையை சொல்றாருனு அர்ச்சனாவுக்கு விபூதி அடிச்சுட்டு இருந்தாரு ரியோ. ஆக்சுவலா, அர்ச்சனா காட்டற அன்பு ஸ்ட்ராட்டஜியா இருக்கலாமோனு ஒரு சந்தேகம் பாலாவுக்கு இருக்கு. அது நமக்குமே இருக்கு. அது ஸ்ட்ராட்டஜியா இருந்தாலும் பரவால்லனு சொன்னது பாலாவுக்கான டிப். அது புரியாம ரியோ & கோ பேசினது காமெடியா தான் பார்க்கப்பட்டிருக்கும்.

அடுத்தது ஆரி

இந்த வாரம் ஆரி எடுத்து வைத்த வாதங்களுக்காக எடுத்த எடுப்பில் பாராட்டினார். பர்பாமர்கள் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி நாம இங்க கேட்ருந்த கேள்விகளை தான் கமல் சாரும் கேட்டாரு. ஆனா அந்த கேள்விகள் புரியாத மாதிரி கமல் சார் முன்னாடியே நடிச்சாங்க பாருங்க....அடேங்கப்பா.... ஆரி தான் ஜெயிலுக்கு போறதை பத்தி வருத்தப்படலை. ஆனா தான் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு தலைபட்சமானதுனு என்பது தான் ஆரியோட குற்றச்சாட்டு. சுவாரஸ்யம் குறைந்த வகையில் நடந்து கொண்டது ஆரி மட்டும் தானா? எனக்கே இன்னும் சிலரை தெரியும்னு சொன்னது ஹவுஸ்மேட்ஸுக்கு புரிஞ்சுதானு தெரியல. இந்த வாரம் முழுக்க சுவாரஸ்யம் இல்லாம வேலை பார்த்தது ஆரி மட்டும் தானானு ஒரு கேள்வியை ரம்யா கிட்ச கேக்க, அவங்க கேள்வி புரியாத மாதிரியே பதில் சொன்னாங்க. ரம்யாவுக்கு உதவியா சம்முவும் பதில் சொன்னாங்க. ஆனா ஆரி ரொம்ப புத்திசாலித்தனமா, கமல் சார் கேட்ட கேள்வியை திரிம்ப கேட்டது பட்டாசு.

அதே மாதிரி இந்த வாரம் முழுவதும் பெஸ்ட் பர்பாமருக்கு சோமுக்கு ஓட்டு போட்டவங்க யாருனு கேக்கவும், அந்த கேள்வியே புரியாத மாதிரி அர்ச்சனா & கோ நடந்துகிட்டது தமாசு. இதிலும் அர்ச்சனா எல்லார் கிட்டயும் கேட்டுட்டு இருந்தாங்க. கடைசில, சோம், பாலா, நிஷா வந்தாங்க, அதுல நிஷாவுக்கு பதிலா சம்மு வந்தாங்கனு, குழப்பியடிச்சு பதில் சொன்னது அர்ச்சனா. எத்தனையோ வருச்ஜமா அர்ச்சனாவை நாம டிவில பார்த்துட்டு இருக்கோம். ஆங்கரிங் வேலை பார்க்கறவங்க வழக்கமா ரொம்ப ஷார்ப்பா இருப்பாங்க. நேத்து அர்ச்சனா நடந்துகிட்டா மாதிரி, கேள்வியே புரியாம இருக்கறதுக்கு வாய்ப்பே இல்லை. முதல்ல தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டவங்க பாலா, நிஷா. அடுத்தது தான் சோம் வராரு. சோம் கூட போட்டிக்கு நின்னவங்க யாருனு கூட இவங்க சொல்லலை.

கடைசி வரைக்கும் சோமுக்கு யார் ஓட்டு போட்டாங்கனு கேட்ட கேள்விக்கு சரியான பதில் வராத நிலைமையில, மீண்டும் ஆரி களமிறங்கினார். கமல் சார் கேட்ட கேள்வியை அழுத்தம் திருத்தமா, தெளிவா, அர்ச்சனாவை பார்த்து கேட்டாரு. கமலும் அதை என்கரேஜ் பண்ணினது ஆரிக்கு செம்ம பூஸ்ட். கடைசியா பொத்தாம் பொதுவா கை தூக்கினாங்க. தேர்ந்தெடுக்கும் முறைல அரசியல் இருக்கும்னு கமல் சார் பேசின போது, குறுக்க புகுந்து மடையை மாத்த பார்த்தாங்க சனம். ஆனாலும் தன்னோட பேச்சுல தெளிவா இருந்தார். ஆரியும் அந்த அரசியலை உடைச்சு பேசினாரு. அட்டகாசமா இருந்தது. சனம் விடாம குறுக்க புகுந்து குரூப்பிசம் பத்தி பேசின போது அவங்களை முந்திரிக்கொட்டைனு கலாய்ச்சாரு கமல் சார். அதுவும் அவங்களுக்கு புரியல. இது வேலைக்காகாதுனு, நீ சேவ் ஆகிட்டனு சொல்லி ஆஃப் செஞ்சு உக்கார வச்சாரு.

நாமினேஷனில் மீதி 10 பேரை 5 அணிகளாக பிரித்தார். சுரேஷ் - அனிதா, பாலா - வேல்ஸ், ஆஜித் - ரம்யா, சோம் - ரமேஷ், ரியோ - நிஷா.... ரியோ கிட்ட நிஷாவோட அணியா உக்காருங்கனு சொல்லிட்டு, ஏற்கனவே அணியா தானே இருக்கீங்கனு பன்ச் அடிச்சது, ரியோவுக்கு புரிஞ்சுதானு தெரியல. இந்த 5 டீம்ல இருந்து அனிதா, பாலா, ரம்யா, ரமேஷ், நிஷா 5 பேரை சேவ்னு சொல்லிட்டு கிளம்பினார் கமல் சார். நிகழ்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் ஆரியும், அனிதாவும் பேசிட்டு இருந்தாங்க. அதிசயமா ஆரி பேசறதை பொறுமையா கேட்டுட்டு இருந்தாங்க அனிதா. கமல் சார்கிட்ட இருந்து ஆரிக்கு கிடைச்ச பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் காரணமா இருக்கலாம்.

இன்னிக்கு என்ன நடக்குதுனு பார்ப்போம்.

You'r reading ஆண்டவர் வருகை.. வீட்டுக்குள் இருக்கும் அரசியலை பேசிய கமல்.. பிக் பாஸின் 28வது நாள்.. Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை