அடுத்த மாசம் சம்பள பணத்துக்கு வேட்டு வைக்க வருகிறது அட்சய திருதியை 3000 கிலோ தங்கம் விற்பனைக்கு டார்கெட்!

by Mari S, Apr 23, 2019, 11:19 AM IST

இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை வரும் மே 7ம் தேதி வருகிறது. மாதத்தின் முதல் வாரமே அட்சய திருதியை வருவதால், சம்பள பணம் மொத்தத்தையும் தங்க நகைகளை வாங்க வைக்க நகைக்கடை வியாபாரிகள் பலவிதமான கவர்ச்சி வலைகளை பின்னத் தொடங்கி விட்டனர்.

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் திருதியை அட்சய திருதியை என அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் பொன், பொருள் என எது வாங்கினாலும், அது பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

அந்த நம்பிக்கையை பயன்படுத்தி சமீப காலமாக நகைக்கடை வியாபாரிகள் தங்கத்தில் முதலீடு செய்யவும், விதவிதமான தங்க நகைகளை உற்பத்தி செய்து மக்களை தங்க நகைகளை வாங்க வைக்கவும் பலவிதமான கவர்ச்சி அறிவிப்புகளையும், புதிய புதிய டிசைன்களையும் சந்தையில் இறக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் 2000 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டதாகவும், சென்னையில் மட்டுமே 1000 கிலோ தங்கம் விற்பனை ஆனதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில் 3000 கிலோ தங்கத்தை விற்பனை செய்ய வியாபாரிகள் டார்கெட் செய்துள்ளனராம்.

சென்னை வர்த்தக மையத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நகைக் கண்காட்சியில் சர்வதேச நாடுகள் தங்களின் புதிய டிசைன்களை அறிமுகம் செய்துள்ளன.

இதில், சிறந்த டிசைன்களை வாங்கிச் சென்றுள்ள நகைக்கடை உரிமையாளர்கள் அதே போன்ற நகைகளை இந்த ஆண்டுக்கான அட்சய திரிதியை ஸ்பெஷலாக செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

பெண்களை கவரும் விதத்தில் பல ஆயிரக்கணக்கான பிரத்யேக டிசைன்கள் தயாராகி வருகின்றன. மேலும், தமிழ் கலாசாராத்தின் அடையாளமான காவிரி ஆறு டிசைன் நகைகளும் இந்த ஆண்டின் ஸ்பெஷல் டிசைனில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்சய திரிதியை அன்று தங்கம் மட்டும்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. சிறிய அளவில் நன்மை செய்தாலும், அது பன்மடங்கு நன்மையாக பெருகி உரிய காலத்தில் உங்களுக்கு உதவும்.


Leave a reply