கேரளா, கோவளம் வாக்குச்சாவடியில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜவுக்கு வாக்குப்பதிவானதாகப் புகார் எழுந்த நிலையில், அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி, கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
தலைநகர் திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட கோவளம் செவ்வர வாக்குச்சாவடியில் உள்ள 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. அங்கு, வாக்களித்தவர்கள் ‘கை’ சின்னத்துக்கு (காங்கிரஸ்) வாக்களித்தால் தாமரை சின்னத்தில் ‘லைட்’ எறிந்ததாகக் கூறினர். இதனையடுத்து, அங்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வாக்குச்சாவடியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.