மக்களவைத் தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலில் அநேக இடங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க அரசு உள்ளது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அதோடு, வரும் மே 19ம் தேதி 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளக் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். அதன் வகையில், அ.தி.மு.கவில் தற்போது 114 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில், தமிமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு, அ.தி.மு.க அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் இவர்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். அதோடு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ-கள் அ.தி.மு.க.வில் இருப்பதால், காலியாக உள்ள 22 தொகுதிகளில் 13 முதல் 14 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உட்பட மொத்தம் 97 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ள தி.மு.க 22 தொகுதிகளில் 21 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும். இல்லையெனில், ஆட்சி கோர முடியாது.
இதனிடையில், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி பெரும் பட்சத்தில், இவர்களுடன் கூட்டணி அமைக்கும் சூழல் தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுக்கு உருவாகலாம். வாய்ப்புகள் அதிகம்.
அ.தி.மு.க தனது ஆட்சியைத் தக்க வைக்குமா? தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றுமா? என்பதை மே 23 பிறகே முடிவு செய்ய முடியும். இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகள் தற்போது கூட்டல் கழித்தல் எனத் தொகுதி வெற்றிவாய்ப்பை அலசி வருகின்றன.