நடிகை மற்றும் பா.ஜ.க வேட்பாளருமான ஜெயப்பிரதாவை நடனக்காரி என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம் கானின் மகன் அப்துல்லா அசம் கான் விமர்சனம் செய்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான் சர்ச்சைக்கு பெயர் போனவர். உத்தர பிரதேசம் ரான்புர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அதேதொகுதியில் பா.ஜ. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். ஜெயப்பிரதா 2 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கருத்து வேறுபாடு காரணமாக சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி தற்போது பா.ஜ.வில் ஜெயப்பிரதா இணைந்துள்ளார்.
அண்மையில் அசம் கான் பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகை ஜெயப்பிரதா பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அசிங்கமாக பேசினார். உத்தர பிரதேசம் மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்து கொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால் நான் அவர் காக்கி கலர் உள்ளாடை அணிந்து இருப்பதை அறிந்து கொண்டேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அசம் கான் பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் அசன் கான் மகன் அப்துல்லா அசம் கானும் நடிகை ஜெயப்பிரதாவை மறைமுகமாக நடனக்காரி என்று விமர்சனம் செய்தார். பொதுக் கூட்டம் ஒன்றில், அலி நம்மவர், பஜ்ரங் பாலி (அனுமன்) நம்மவர். நமக்கு அலியும் வேண்டும், பஜ்ரங் பாலியும் வேண்டும். ஆனால் அனார்கலி (நடனக்காரி) நமக்கு வேண்டாம் என்று அப்துல்லா அசம் கான் பேசி இருந்தார்.
இது குறித்து நடிகை ஜெயப்பிரதாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை. அப்பாவை போல் பையன். இதை நான் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவர் படித்த மனிதர். உங்க அப்பா என்னை அமரபாலி என்கிறார் நீங்க என்னை அனார்கலி என்று சொல்றீங்க. இதுதான் நீங்க சமூகத்தில் பெண்களை பார்க்கும் பார்வையா? என்று பதில் அளித்தார்.