புதுடெல்லி: கூகுள் தேடலில் ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
உலகத்திலேயே தகவல் தேடலுக்கு முன்னோடியாக விளங்குவது கூகுள் தளம். எந்த ஒரு தகவல் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என்றாலும் கூகுள் சர்ச்சில் தேடி தெரிந்துக் கொள்ளலாம். இதனால், இது உலகிலேயே மிகப்பெரிய சர்ச் இன்ஜினாக உள்ளது.
ஆனால், தேடலில் தனக்கு உள்ள சந்தை ஆதிக்கத்தை பயன்படுத்தி சட்டவிரோத பலன்களை ஏற்படுத்தியதாகவும், விதிகளுக்கு முரணானது எனவும் கூறி கடந்த 2012ம் ஆண்டு பிரபல திருமண சேவை இணைய தளம் ஒன்று இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
கூகுளுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு விசாரணையின் முடிவில் உறுதியானதை அடுத்து, கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது.
மேலும், இந்த அபராத தொகையை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.