நம் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், இந்த ஆண்டு தீபாவளி முதல் குறைந்த விலைக்கு 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வருகையை தொடர்ந்து, தொலைத்தொடர்பு சார்ந்த போட்டிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஜியோவின் சலுகைகளை எதிர்கொள்ளவும், சந்தையில் தனது நிலைப்பாட்டை தக்கவைத்துக்கொள்ளவும் ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி ஜியோ போன் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் அதேபோல மலிவு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் புதிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்கள் 2,500 ரூபாய் முதல் 2,700 ரூபாய்க்குள் தீபாவளி பண்டிகை சமயத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் இரட்டை சிம் வசதி, 4 இன்ச் டிஸ்ப்ளே, முன் மற்றும் பின்புற கேமராக்கள், 1ஜிபி ரேம் எனக் குறிப்பிட்ட சில சிறப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.