4ஜி உலகில் வாழும் மக்களுக்கு இலவச அன்லிமிட்டட் சேவையை அள்ளி தெளித்துக் கொண்டிருந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஏப்ரல் முதல் அதற்கான கட்டணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
டேட்டா மற்றும் குரல்வழி சேவையை இலவசமாக வழங்கிவந்த ஜியோ நிறுவனம், பின் மூன்று மாதங்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்கி 309 ரூபாய் கட்டணமாக வசூலித்தது.
அதைத் தொடர்ந்து அதே திட்டத்துக்கு 84 நாட்களுக்கு 399 ரூபாய் என நிர்ணக்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவன ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் 84 நாட்கள் பிளானுக்கான கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.459 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு அக்டோபர் 19 (நேற்று) முதல் அமலுக்கு வந்தது. இதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் தினந்தோறும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் குரல்வழி சேவையை 84 நாட்களுக்கு பயன்படுத்தலாம். முன்னதாக இந்தத் திட்டத்தின் கீழ் 84 நாட்களுக்கு மேற்கண்ட சலுகைகளைப் பெற ரூ.399 மட்டுமே வசூலிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறுகிய காலகட்டத்துக்கான கட்டணங்களையும் குறைத்துள்ளது. அதன்படி இலவச குரல் வழி அழைப்புகள், குறுஞ்செய்தி, 1ஜிபி 4ஜி மற்றும் அன்லிமிட்டட் 2ஜி டேட்டா ஆகியவற்றை ஒரு வார காலத்துக்கு வழங்குவதற்கான கட்டணம் ரூ.52 என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
அதேபோல 2 வார காலத்துக்கு 2ஜிபி 4ஜி டேட்டாவுடன் மற்ற சேவைகளையும் சேர்த்து ரூ.98 என்றும் நிர்ணயித்துள்ளது. மேலும், 28 நாட்களுக்கு ரூபாய் 149-க்கு வழங்கிய 2ஜிபி அளவிலான டேட்டாவை இரட்டிப்பாக்கி, இனி 149 ரூபாய் கட்டணத்திற்கு மாதம் 4 ஜிபி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஜியோவின் அனைத்து திட்டங்களும் அன்லிமிட்டட் குரல்வழி சேவையை இலவசமாகவே அளிக்கின்றன. இது ரோமிங் நேரத்திலும் பொருந்தும். அதேபோல தினசரி 2 ஜிபி டேட்டா அளிக்கும் ரூ.509 திட்டத்துக்கான வேலிடிட்டி நாட்கள் 56 தினத்தில் இருந்து 49 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு 90 ஜிபி 4ஜி டேட்டாவை அளிக்கும் ரூ.999 பிளானில் டேட்டாவின் அளவு 60 ஜிபியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தினசரி 1 ஜிபி டேட்டாவுக்கு 459 ரூபாய் செலவு செய்யவேண்டும் என்பதால், இதுவரை 399 ரூபாய்க்கு ரீஜார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் இனி மாதம் 149 ரூபாய் ரீஜார்ஜ்-க்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தீபாவளிக்கு பிறகு ஏதாவது ஆஃபர்கள் வரும் என்று காத்திருந்த ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, பொறிக்குள் சிக்கிய எலி போல ஜியோவிலேயே தொடரலாமா, அல்லது முன்பு பயன்படுத்திய நெட்வொர்க்கிற்கே மாறிக்கொள்ளலாமா, அல்லது வேறு நெட்வொர்க் பற்றி விசாரிக்கலாமா என்ற குழப்பத்தில் தற்போது ஜியோ வாடிக்கையாளர்கள் உள்ளனர்.