மியான்மர் பாதுகாப்புப் படை நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டின் மேற்கு பகுதியில் வசிக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள அந்நாட்டு ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக கூறி, அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால் ரோஹிங்யா மக்கள் கூட்டம் கூட்டமாக வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பாவி மக்கள் மீது மியான்மர் ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாகவும், அவர்களை இனப்படுகொலை செய்து, போர் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் ஏறக்குறைய 5லட்சத்து 80ஆயிரம் மக்கள் பங்களாதேஷூக்கு அகதிகளாக குடியேறியுள்ளனர்.
ஆனால், முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுத்ததாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையும், மற்றவைகளும் மியான்மர் அரசை குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், மியான்மர் பாதுகாப்புப் படை நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சில கிராமங்களில் உள்ள பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.