வர்த்தக போரை கைவிட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ ஹி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கு 25% வரியும், ஸ்டீலிற்கு 10% வரியும் விதித்து அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
ஆனால், டிரம்ப்பின் இந்த சுங்க வரி விதிப்பிற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு மட்டும் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதனால், சீனாவின் முழு கண்டனமும் அமெரிக்காவை நோக்கி திரும்பியது. மேலும், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீனா திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது . இந்த குற்றச்சாட்டு அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.
இதனிடையே, அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு பெருமளவில் கூடுதல் சுங்க வரிக்கட்டணங்கள் கொண்டு வரப்பட்டன.
குறிப்பாக, மாமிசம், பழங்கள் உள்பட 128 அமெரிக்க பொருட்களுக்கு 3 பில்லியன் டாலர் அளவுக்கு சீனா வரி விதித்தது. இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1,300 பொருட்களுக்கு 25% வரை வரி உயர்த்தி அமெரிக்கா மீண்டும் வரிப் பட்டியலை வெளியிட்டது.
நீடித்த இந்த வர்த்தகப் போரால் இரு நாடுகளுக்கும் வணிக இழப்பு ஏற்பட்டது. இதனால், வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், வர்த்தக போரை கைவிட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ ஹி தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com