ஐரோப்பிய ஒன்றியம் - ஜப்பான் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம்

ஐரோப்பிய ஒன்றியம் - ஜப்பான் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

Jul 21, 2018, 19:40 PM IST

உலக பொது உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினை வகிக்கும் பகுதிகளான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் இடையே திறந்த வர்த்த மண்டலத்தை உருவாக்கும் மிகப் பெரிய ஒப்பந்தம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஜூலை 17-ஆம் தேதி கையெழுத்தானது. இம்மண்டலத்தில் 60 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.

Trade agreement

பல ஆண்டுகளாக இதற்கான ஆயத்தங்கள் நடந்து வந்தன. கடந்த ஆண்டு இதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, புரூனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகளோடு அமெரிக்கா செய்திருந்த டிரான்ஸ் பஸிபிக் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விலகிக் கொண்ட நிலையில் இந்தப் பெரிய ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.

அமெரிக்கா, அலுமினியம் மற்றும் எஃகு மீது வரி விதித்தது அதன் வர்த்தக தோழர்களான கனடா, மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் வரியை அமெரிக்கா விதித்தது. இதன் காரணமாக சீனா, உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. இப்படி பல்வேறு நாடுகளோடு அமெரிக்காவின் வர்த்தக உறவு உரசலை சந்தித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் ஜப்பானுக்கு செலுத்தவேண்டிய 1.1 பில்லியன் டாலர் வரியில் பெரும்பகுதி நீக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகக்கூடிய ஜப்பானிய பொருட்களின் மீதான வரிகளில் 99 சதவீதமும், ஐரோப்பிய ஏற்றுமதியாளர்கள் ஜப்பானுக்கு செய்யும் ஏற்றுமதி மீதான வரிகளில் 94 சதவீதமும் குறைக்கப்படும். எதிர்காலத்தில் இது 99 சதவீதமாக உயரும் என்று நம்பப்படுகிறது.

Agreement signed

ஜப்பானிய கார்கள் மீதான வரி 10 சதவீதமும், கார் உதிரி பாகங்கள் மீதான வரி 3 சதவீதமும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அகற்றப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாலடைக்கட்டி (சீஸ்) மீதான வரியில் 30 சதவீதமும், ஒயின் மீதான வரி 15 சதவீதமும் குறைக்கப்படும்.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், ஐரோப்பிய உணவு பொருட்கள், தங்களை பாதிக்கக்கூடும் என்று சில ஜப்பானிய விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். “உலகம் முழுவதும் சுயபாதுகாப்பு வர்த்தகம் பற்றிய கவனம் எழுந்துள்ளது. சுதந்திரமான, நேர்த்தியான விதிகளை கொண்ட வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை இந்த ஒப்பந்தம் உணர்த்தும்” என்று ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே கூறியுள்ளார்.

“உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார சக்திகளாகிய நாங்கள் இன்னும் வெளிப்படையான வர்த்தகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை, சுயபாதுகாப்பு வர்த்தகத்தை, தன்னிச்சையான நடவடிக்கைகளை எதிர்க்கிறோம் என்பதை உலகிற்கு கூறியுள்ளோம்," என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் சிசிலியா மால்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றங்களின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்பின்பு, அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

You'r reading ஐரோப்பிய ஒன்றியம் - ஜப்பான் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை