லாரிகள் வேலைநிறுத்தத்தின் எதிரொலியாக, விவசாய விளைபொருட்களை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அரசுப் பேருந்தில் ஏற்றிச் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 2-வது நாளாக தொடர்கிறது. ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்து அவற்றின் விலையை குறைக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால், ஜவுளி, கட்டுமான பொருட் கள், தீப்பெட்டி, மோட்டார் உதிரிபாகங்கள், வடமாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தடைபட்டுள்ளன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
“லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாக ஏற்றிச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது."