'இபே' (eBay) இந்தியா மின்னணு வர்த்தக தளத்தின் செயல்பாடுகளை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முடித்து கொண்டுள்ளது. 2018 ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பிறகு 'இபே.இன்' தளம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 'இபே' மின்னணு வர்த்தக தளம், இந்தியாவின் ஆன்லைன் சக்கரவர்த்தியான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இபே, மைக்ரோசாஃப்ட் மற்றும் டென்சென்ட் ஆகிய உலக தொழில்நுட்ப முன்னணி நிறுவனங்களுடனான வர்த்தக செயல்பாட்டில் 1.4 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியது.
அதைத் தொடர்ந்து நடந்த வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 'இபே' நிறுவனம் ஃப்ளிப்கார்ட் நிறுவன பங்குகளில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ததுடன், தங்களது இந்திய செயல்பாட்டினை ஃப்ளிப்கார்ட்டிடம் ஒப்படைத்து விட்டது.
கடந்த மே மாதம் அமெரிக்காவின் சில்லறை வர்த்தக பெருநிறுவனமான வால்மார்ட், ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு (ரூ.1,07,662 கோடி) வாங்கியது.
ஃப்ளிப்கார்ட்டின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, தனது நிறுவன பணியாளர்களுக்கு கடந்த மாதம் அனுப்பியிருந்த மின்னஞ்சலில், 'இபே'தளத்தின் மூலம் நடைபெறும் மின்னணு வர்த்தகத்தை ஃப்ளிப்கார்ட் முடித்துக் கொள்ள இருப்பதாகவும், விரைவில் புதிய மின்னணு வர்த்தக தளத்தினை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
புதிய ஆர்டர்களை எடுக்காவிட்டாலும் ஆகஸ்ட் 30ம் தேதி வரைக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிமாற்றத்தை முடித்துக் கொள்ள காலம் இருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பரிமாற்ற விவரங்களை, 'மை பைசாபே' (My PaisaPay) மற்றும் 'மை இபே' (My eBay) ஆகியவற்றில் பார்த்துக்கொள்ளலாம் என்றும், இந்தியாவுக்கென புதிய தளத்தினை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் 'இபே' நிறுவனம் தெரிவித்துள்ளது.