ஓலா செயலி (App)வாடகை கார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2017 ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள்ளாக 53 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2016 - 17ம் ஆண்டில் 4,897.8 கோடி ரூபாய் இழப்பை பார்த்தாலும், அதன் மொத்த வருமானம் 70 சதவீதம் உயர்ந்துள்ளது. 2015 -16ம் ஆண்டுகளில் ஒவ்வொரு சிறுபயணத்திற்கும் 100 முதல் 200 ரூபாய் இழப்பை சந்தித்து வந்த நிறுவனம், இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒவ்வொரு காரின் ஒவ்வொரு பயணத்திலும் லாபம் ஈட்ட தொடங்கி விட்டது. ஒப்பு நோக்க போட்டி நிறுவனமான உபேரின் பங்குகளோ 42 சதவீதத்திலிருந்து 39.6 சதவீதமாக சரிந்துள்ளது.
2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம், ஆஸ்திரேலியாவை கடந்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விரிவடைந்துள்ளது.
மாற்றம் தந்த நிகழ்வு
பாவிஸ் அகர்வால் என்ற இளைஞன் தன் நண்பர்களுடன் வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக பந்திப்பூரிலிருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருக்கிறார். அவர்கள் வாடகை வாகனம் ஒன்றில் போய்க்கொண்டிருந்தனர். வழியில் மைசூரில் காரை நிறுத்திய ஓட்டுநர், அதிகமாக பணம் தர ஒப்புக்கொண்டால்தான் மேற்கொண்டு வருவேன் என்று தகராறு செய்கிறார். நண்பர்கள் வேறு வழியில்லாமல், காரை விட்டு இறங்கி பேருந்தில் தங்கள் பயணத்தை தொடருகின்றனர். பாவிஸ் அகர்வால் வேறு யாருமல்ல. அவர்தான் ஓலா நிறுவனத்தை தொடங்கியவர். ஓலாவின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியும் அவர்தாம்!
கம்ப்யூட்டர் எஞ்ஜினியரும் வாடகை காரும்
பாவிஸ் அகர்வாலின் பெற்றோர் மருத்துவர்கள். லூதியானாவில் பிறந்த பாவிஸ், ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம் என்று பல நாடுகள் வளர்ந்து, தொழில்நுட்பம் படிப்பதற்காக பாம்பே ஐஐடியில் சேர்ந்தார். அங்கு அவர் கணிணி அறிவியல் தொழில்நுட்பத்தை கற்றார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியும் கிடைத்தது. சிறிது காலத்திற்குப் பின், பாவிஸ் அகர்வால், ஜோத்பூரை சேர்ந்தவரும் உடன் படித்தவருமான அன்கித் பதியுடன் சேர்ந்து, கார்களை வாடகைக்கு விடுவதற்காக இணையதளம் ஒன்றை தொடங்கினார். பாவிஸ், தன் குறிக்கோளை விளக்கியபோது அவரது பெற்றோருக்கு ஒன்றுமே புரியவில்லை. "மைக்ரோசாஃப்டில் நல்ல வேலையை விட்டு விட்டு ஏன் டிராவல் ஏஜெண்ட்டாக வேண்டும்?" என்பதே அவர்கள் கேள்வியாக இருந்தது.
அறை ஒன்றில் தொடங்கிய அலுவலகம்
மும்பையில் ஒரே ஒரு அறை கொண்ட வீடு ஒன்றில் அகர்வாலும், பதியும் அலுவலகத்தை தொடங்கினர். காலையில் அலுவலகம், இரவில் படுக்கும் இடம்! அப்படித்தான் இயங்க தொடங்கியது அவர்கள் அலுவலகம். முதலில் வெளியூர் பயணத்திற்காக கார்களை பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஆனால், நான்கே மாதத்தில் அதை முடித்துக்கொள்ள வேண்டியதாக போய்விட்டது.
செயலி (App) என்ற திருப்புமுனை
2012ம் ஆண்டில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு கார்களை அனுப்பிக்கொண்டிருந்தனர் இருவரும். டிரைவர் கிடைத்தால் கார் கிடைக்காது. கார் கிடைத்தால் டிரைவர் கிடைக்கமாட்டார் என்று தடைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தோழர்களிடம் காரை இரவல் வாங்கி வாடகைக்கு அனுப்பிய அனுபவம் கூட உண்டு. விரைவிலேயே ஓலா நிறுவனம் செயலியை அறிமுகம் செய்தது. அதே ஆண்டில் டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனம் 5 மில்லியன் டாலரை ஓலாவில் முதலீடு செய்தது. அப்போதுதான் தாங்கள் ஏதோ உருப்படியாக செய்து கொண்டிருக்கிறோம் என்று உணர ஆரம்பித்தனர் நண்பர்கள்.
கெத்துடா...
அதன்பின்னும் பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. தமது மனைவியை ஓலா வாகனத்தை பயன்படுத்த வைக்கவே மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாக அகர்வால் கூறியுள்ளார். ஜப்பானின் சாஃப்ட்பேங்க் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் செக்கியோ கேப்பிட்டல் ஆகியவற்றிலிருந்து நிதி வர ஆரம்பித்ததும் நிறுவனம் ஸ்திரப்பட்டது. தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் 110 நகரங்களில் ஓலா நிறுவனத்திற்காக ஓட்டுகிறார்கள். 6,000 பேர் அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள்.
சொந்த கதை
ஓலா நிறுவனம் லூதியானாவிலும் சேவையை ஆரம்பித்தது. பாவிஸ் அகர்வாலின் சொந்த ஊர் அது. அதுவரை பாவிஸ் அகர்வாலின் தாயாருக்கு கார் ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர், வேலையை ராஜினாமா செய்து விட்டு, சொந்தமாக ஒரு காரை வாங்கி, ஓலா நிறுவனத்துடன் அதை இணைத்துக்கொண்டார். அகர்வாலின் தாயாரும் மகனின் செயலியை (Ola App) தரவிறக்கம் செய்தார். "மகனே ஜெயிச்சுட்டேடா..." என்பதை தவிர அந்த தாயார் என்ன கூறியிருக்க முடியும்?