மைதானத்தில் பந்துகளை எடுத்துக் கொடுக்கும் “பால் பாய்”யாக கிரிக்கெட் உலகில் காலடி பதித்து, கிரிக்கெட் வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு மேல் பல சாதனைகள் புரிந்த சாதனை நாயகன் சச்சினுக்கு இன்று 48 வது பிற்ந்தநாள்.
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்த சச்சின், மிக இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது பித்து கொண்டார். பிறகு உலகம் அவர் மீது பித்தானது வரலாறு. வேகப்பந்து வீச்சாளராக பயிற்சி பெற வந்தவரிடம் இருந்த பேட்டிங் திறமையை கண்டு சொன்னவர் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி. பிறகென்ன பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சச்சின் புகுந்து விளையாட 16 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார் சச்சின்.
1989 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதன்முதலாக களம் கண்டார். 17 வயதில் இங்கிலாந்து எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தையும், 19 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் சதத்தையும் பதிவு செய்தார்.
அசாரூதீனுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சச்சினால் அதில் திறன்பட செயல்பட முடியவில்லை. தொடர்ந்து பேட்ஸ்மேனாகவே கவனம் செலுத்திய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களையும் 6 இரட்டை சதங்களையும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்களையும் ஒரு இரட்டை சதத்தையும் பதிவு செய்து ஒட்டுமொத்தமாக 100 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 463 ஓருநாள் போட்டிகளிலும், 200 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள சச்சின் டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஒரே போட்டியில் களமிறங்கியுள்ளார். பந்துவீச்சாளராகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்த அவர், ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும், டி20யில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
1992 முதல் 2011 வரை 6 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றார். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை தொடரை வென்றபோது அணியில் இடம்பெற்றிருந்த சச்சின், இளம் வீரர்களுக்கு இணையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
2012 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும் இருந்தும் 2013 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின்.
பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, லாரஸ் உலக விளையாட்டு விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.