மத்திய அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட 5 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் ஐந்து தனியார்தொலைத் தொடர்பு நிறுவனங்களால் மத்திய அரசுக்கு ரூ. 14 ஆயிரத்து 800 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) டிசம்பர் 19-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
டாடா டெலிசர்வீசஸ், டெலினார், வீடியோகான் டெலிகாம், குவாட் ராண்ட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய ஐந்து நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ரூ. 14 ஆயிரத்து 800 கோடியைக் குறைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
உரிமம் உள்ளிட்டவற்றுக்காக அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தில் ரூ. ஆயிரத்து 15 கோடியே 17 லட்சம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக்கான கட்டணத்தில் ரூ. 511 கோடியே 53 லட்சம், தாமதக் கட்டணத்திற்கான வட்டித் தொகையில் ரூ. ஆயிரத்து 52 கோடியே 13 லட்சம் என்று குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக விளக்கப்பட்டிருந்தது.
நிறுவன வாரியாக, டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் ரூ. ஆயிரத்து 893 கோடியே 6 லட்சம், டெலினார் நிறுவனம் ரூ.603 கோடியே 75 லட் சம், வீடியோகான் நிறுவனம் ரூ. 48 கோடியே 8 லட்சம், குவாட்ரண்ட் நிறுவனம் ரூ. 26 கோடியே 62 லட்சம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 6 கோடியே 78 லட்சம் குறைப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஆனால், இந்த 5 நிறுவனங்களில் வீடியோகான் டெலிகாம், டெலினார், டாடா டெலிசர்வீசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் தனது மொபைல் சேவைச் சொத்துகளை ஏர்டெல் நிறுவனத்திடம் விற்பனை செய்து விட்டன என்பதுடன், குவாட்ரண்ட் நிறுவனமும் தனது சேவையை நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே தற்போதும் இருக்கிறது.