ஒரே வீட்டை வைத்து ரூ.2.8 கோடி சுருட்டிய தாய் - மகள் டெல்லியில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்தவர்கள் மோலி கபூர் (வயது 65), மற்றும் அனுராதா கபூர். இருவரும் தாய் - மகள். இவர்கள் இருவரும் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள தங்கள் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2015ம் ஆண்டு இவர்கள் இருவரும் தங்கள் வீட்டை கிரையம் முடித்து தருவதாக கூறி ஐந்து பேரிடம் பேசியுள்ளனர். அந்த ஐந்து பேரிடமும் 60 லட்ச ரூபாய், ஒரு கோடி ரூபாய் என மொத்தமாக 2.5 கோடி ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டுள்ளனர். முன்பணத்தை வாங்கிய பிறகு இருவரும் ஆளை காணவில்லை. தங்கள் போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
பின்னர் முன்பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்க விவகாரம் பெரிதானது. இருப்பினும் இத்தனை வருடங்களாக போலீசார் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் டெல்லியில் தனியார் ஹோட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு உண்மைகள் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ``அனுராதா லண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
லண்டனில் படித்துவிட்டு நாடு திரும்பிய அவருக்கு சீக்கிரத்தில் பணக்காரர் ஆக வேண்டும் என ஆசை இருந்தது. அப்போது தான் தனது வீட்டை வைத்து மோசடி செய்ய திட்டமிட்டுள்ளார். இப்படி ஒரு யோசனையை தனது தாயிடமும் கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்தி மோசடிக்கு உறுதுணையாக மாற்றியுள்ளார். அதன்படியே இருவரும் சேர்ந்து ரூ.2.8 கோடி அளவில் சுருட்டியுள்ளனர். நீண்ட தேடலுக்குப்பின்பு அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளோம்" என்றனர். பணக்காரராக ஆசைப்பட்டு மோசடி செய்த பட்டதாரி பெண் தன் தாயுடன் சிறைவாசம் அனுபவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.