டோக்யோ: ஜப்பானில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜப்பானில் சப்போரோ என்ற பகுதி உள்ளது. இங்கு, பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் முதியோருக்காக உள்ளூர் அமைப்பு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் செயல்பட்டு வந்தது.
மூன்று தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் 16 முதியோர்கள் தங்கி இருந்தனர். இங்கு, முதியோர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளையும் உள்ளூர் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த இல்லத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீப்பற்றியதை உணர்வதற்குள் தீ மள மளவென பரவியது. இருப்பினும், முதியோர் இல்ல நிர்வாகிகள் சிலர் முதியோர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அனைவரையும் மீட்க முடியவில்லை. இதனால், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து முதியோர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ மளமளவென வீடு முழுவதும் பரவி எரிந்து சாம்பலானது. இந்த கோர விபத்தில் சிக்கி 8 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 11 பேர் உடல் கருதி உயிரிழந்தனர். மேலும். 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.