தமிழ்த் திரையுலகத்தில் குணச்சித்திர வேடங்களில் அருமையான பங்களிப்பை செலுத்தியவர்களுல் குறிப்பிடத்தகுந்தவர் நடிகர் ரகுவரன். 1982ம் ஆண்டு வெளிவந்த ஏழாவது மனிதன் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால், அவரது அமைதியான வில்லத்தனம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. வில்லன் நடிகர் என்றாலே பெரிய கொடூரமான கத்தல்களுடனும், ஆயுதங்களுடன் திரிந்தவர்கள் மத்தியில் நடிப்பின் மூலமும், உச்சரிப்பின் மூலமும் வில்லத்தனத்தை காட்டியவரை மக்களுக்கு பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை.
அஞ்சலி, புரியாத புதிர், மிஸ்டர் பாரத், பூவிழி வாசலிலே, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், ரன், யாரடி நீ மோகினி தொடர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரகுவரன். உடல்நலக் குறைவு காரணமாக 2008ம் ஆண்டு மரணம் அடைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஆனால், அவர் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோவில் தேர்ச்சி பெற்றவர் என்பது பரவலாக யாருக்கும் தெரியாது. இசை மீது அவருக்குள்ள ஆர்வத்தால் அவர் 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துப் பாடி வைத்துள்ளார். அவற்றை ரகுவரனின் மனைவி நடிகை ரோகிணி, மகன் ரிஷிவரன் ஒரு இசை ஆல்பமாகத் தொகுத்துள்ளார்கள்.
ரகுவரன் - எ மியூசிக்கல் ஜர்னி [Raghuvaran - A Musical Journey] எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆல்பத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பத்தில் 5 பாடல்களும், ஒரு தீம் மியுசிக்கும் இடம் பெற்றுள்ளது. பாடல்கள் ஒரு இனிய பரவசத்தை நம்முள்ளே கொடுக்கிறது. அவர், இறந்த போது ஏற்பட்ட அதிர்ச்சியை விட, இந்த இசைத் தொகுப்பை கேட்டு முடித்தபோது மேலும் சோகம் அதிகரிக்கிறது.
ரகுவரனின் இசைத் தொகுப்பை இங்கே முழுமையாக காணலாம்:
நன்றி : Saregama