மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!

by Ari, May 4, 2021, 12:11 PM IST

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரொனாவின் தாக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்புகளை மக்களிடையே உருவாக்கி வருகிறது. நாள்தோறும் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதித்து வரும் நிலையில், ஆயிரக் கணக்கான மக்கள் தினமும் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை பியா பாஜ்பாயின் சகோதரரும் கொரோனாவால் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "எனது சகோதரர் உயிருடன் இல்லை" என்றும் நடிகை பியா பாஜ்பாய் தனது ட்விட்டர் பக்கத்தில் மனமுடைந்து ட்வீட் செய்துள்ளார்.

தனது சகோதரர் உயிருக்கு போராடி வருவதாகவும், உத்திர பிரதேசத்தில் உள்ள ஃபருக்தாபாத்தில் உள்ள கயாம்கன்ஜ் பிளாக்கில் வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கை வசதி வேண்டுமென்று காலை முதலே பல பிரபலங்களுக்கும் கோரிக்கை வைத்து வந்தார் நடிகை பியா பாஜ்பாய், இந்நிலையில், அவரது சகோதரர் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோ, கோவா, ஏகன், சரோஜா உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய். சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கொரோனாவுக்கு இயக்குநர் கே.வி. ஆனந்த் உயிரிழந்த செய்தியை அறிந்த நடிகை பியா பாஜ்பாய், இது பொய்யான செய்தியாக இருக்கக் கூடாதா என மனமுடைந்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், அவரது வீட்டிலேயே கொரோனாவால் இப்படியொரு சோகம் நிகழ்ந்துள்ளது. நடிகை பியா பாஜ்பாயிக்கு திரைத்துறையினரும் அவரது ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

You'r reading மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை