தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' எக்கச்சக்கமாக ஆகிவிட ஏக சந்தோஷத்தில் உள்ளனர் தொகுதி மக்கள். முதல் கட்டமாக தலைக்கு ரூ 1000 என ஜரூராக பட்டுவாடா நடந்து முடிந்த நிலையில் அடுத்த ரவுண்டில் டபுள் மடங்காக ரூ 2000 கிடைக்கப் போகிறது என்ற தகவலால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் தொகுதிவாசிகள் .
தமிழகத்திலேயே தேனி தொகுதியில் தான் தேர்தல் களம் படு சூடாக காணப்படுகிறது. தேனி மக்களவைத் தேர்தலுடன் இத்தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப்பேரவைக்கும் இடைத் தேர்தல் நடப்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பாகி கிடக்கிறது தேனி தொகுதி.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அமமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க .தமிழ்ச்செல்வன் போட்டியிடுகின்றனர். மூவருமே பிரபலமானவர்கள் என்பதால் சரியான மல்லுக்கட்டு நடக்கிறது. அதிலும் ரவீந்திர நாத்துக்கும் தங்க .தமிழ்ச்செல்வனுக்கும் இடையேயான நீயா ?நானா? யுத்தத்தால் சாதி ரீதியாகவும் பிளவுபட்டு மக்களை கொதிநிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மும்முனைப் போட்டி நிலவும் தேனியில் தன் மகன் ஜெயித்தால் மட்டுமே அதிமுகவில் தனக்கு எதிர்காலம் என்பதால், இதனை கவுரவப் பிரச்னையாக கருதும் ஓபிஎஸ், அனைத்து மாயாஜாலங்களையும் நிகழ்த்தி வருகிறார்.
ஸ்பெஷலாக பிரதமர் மோடியையே தேனிக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். முதல்வர் எடப்பாடியும் தேனி தொகுதியில் மட்டும் 15 இடங்களில் வேன் பிரச்சாரம், பொதுக் கூட்டம் என ஸ்பெஷல் பிரச்சாரம் செய்தார். போதாக்குறைக்கு தன் குடும்பத்து பெண்கள் அனைவரையும் களத்தில் இறக்கி விட்டு தெருத்தெருவாக ஓட்டுக் கேட்கச் செய்தார்.
இது மட்டுமின்றி பிரச்சாரத்திற்கு செல்லுமிடமெல்லாம் ஆரத்தி , வரவேற்பளிக்கும் மக்களுக்கு குறைந்தபட்சமே ரூ 500 என தாராளம் காட்டப்பட்டது.
கடைசியாக நேற்று முன் தினம் ஒரே இரவில் தொகுதி முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ஜருராக பட்டுவாடா முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக டபுள் மடங்காக ரூ 2000 வழங்கப்பட உள்ளதாகவும், இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் ஸ்பெஷலாக ரூ.5 ஆயிரம் என்றும் தகவல் பரவி, தேனி தொகுதி மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தக் கவனிப்பெல்லாம் ஓ.பி.எஸ். மகனை கரை சேர்க்குமா ? என்ற கேள்விகளும் தேனி தொகுதியில் எழாமலும் இல்லை.