சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை, ரூ.7.50 லட்சம் கொள்ளை

jewelry workers robbed by fake anti Statue smuggling unit police

by Subramanian, Apr 30, 2019, 07:55 AM IST

சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரூ. 7.50 லட்சம் பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் கிரண்ராவ். சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர். சென்னை அண்ணாசாலையில் கிரண்ராவுக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு விலை உயர்ந்த நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடையின் சார்பில் மதுரையில் நகை கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சி முடிவடைந்ததும் மீதி நகைகளையும், நகை விற்ற பணத்தையும் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். நகைக்கடை பொதுமேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் 2 பேர் காரில் ரூ.11 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் நகை விற்பனையான தொகை ரூ.7.50 லட்சத்தையும் ஒரு பெரிய பையில் வைத்து காரில் எடுத்து வந்தனர்.

நேற்று அதிகாலை காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு கார் ஒன்று வந்தது. அந்த காரில் வந்தவர்கள் நகைக்கடை ஊழியர்கள் வந்த காரை வழிமறித்தனர். அதில் இருந்து டிரைவர் உள்பட 7 பேர் இறங்கினர். அதில் 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்தனர். தங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறிய அவர்கள், அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தனர்.

பின்னர், உங்கள் கடை உரிமையாளர் மீது சிலை கடத்தல் வழக்கு இருப்பதால், சந்தேகத்தின்பேரில் காரை சோதனையிட வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஊழியர்கள் காரை சோதனையிட அனுமதித்தனர். இதனையடுத்து காரில் இருந்த ஒரு பெரிய பையை அவர்கள் சோதனை செய்தனர்.

அதில் ஏராளமான நகைகள் இருந்தன. அவை அனைத்தையும் எடுத்துக்கொண்ட அவர்கள், விசாரணைக்காக நகைக்கடை ஊழியர்களையும் அழைத்து சென்றனர்.

காரை சோதனை செய்தவர்கள் அதிகாரிகள் தான் என்று நம்பிய ஊழியர்களும் அவர்களுடன் சென்றனர். ஒரகடம் என்ற இடம் அருகே கார் வந்தபோது, திடீரென நகைக்கடை ஊழியர்களை நடுரோட்டில் இறக்கி விட்ட கும்பல், அவர்களை செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறி சென்றதாக தெரிகிறது.

செய்வதறியாது திகைத்த ஊழியர்கள், அங்கிருந்து ஆட்டோ மூலமாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்த்தனர். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் யாரும் போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை என்று அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர்.

உடனே இதுகுறித்து சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் வாகனசோதனை செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதன்பின்னர் தான், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் போல நடித்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் உண்மையாகவே காரில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறி நகை, பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பனிமனிதன்' உண்மைதானா..? -கால் தடம் கண்டுபிடிப்பு

You'r reading சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை, ரூ.7.50 லட்சம் கொள்ளை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை