திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

by Subramanian, May 1, 2019, 19:05 PM IST
Share Tweet Whatsapp

திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையம் வாயிலாக தங்கம் கடத்தல் நடைபெற உள்ளதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர்ஏசியா மற்றும் மாலின்டோ ஏர்லைன்ஸ் விமானங்களில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது 3 பயணிகளிடமிருந்து சுமார் ரூ.31 லட்சம் மதிப்பிலான 957 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தங்க கடத்தலில் ஈடுபட்டவர்கள், இளையன்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி, கடலூரை சேர்ந்த முகமது நியாஸ் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த சபுபார் அலி என்பது தெரியவந்தது.

சுங்க அதிகாரிகள் அன்சாரியிடமிருந்து ரூ.7.66 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்க செயினும், நியாசிடமிருந்து ரூ.11.33 லட்சம் மதிப்பிலான 355 கிராம் தங்க செயினும், அலியிடமிருந்து ரூ.11.90 லட்சம் மதிப்பிலான தங்க செயினும் பறிமுதல் செய்தனர்.


Leave a reply