சென்னையில் நகை மோசடியில் ஈடுபட்ட ரூபி நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் இயங்கி வந்தது ரூபி நகைக்கடை. அந்த நகைக்கடையினர் இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக அறிவித்ததால், அதை நம்பி ஏராளமான இஸ்லாமியர்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.
இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர்கள், அனீஸ் மற்றும் சையது இப்ராஹிம் ஆகிய இருவரும், கடையை பூட்டி விட்டு நகைகளுடன் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50 பேர், நேற்றுமுன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் மோசடி ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, சுமார் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், புகார் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.