உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்

Hindu Religious and Charitable Endowments Department conduct a study in sathuragiri temple

by Sasitharan, May 9, 2019, 15:47 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மகாலிங்கம் மலையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சதுரகிரி மகாலிங்கம் மலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமான இங்கே இன்னும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற முக்கிய நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதுபோக ஆடி அம்மாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் திரண்டு வழிபாடு நடத்துவர். அதிகமான மக்கள் கூடும் தலம் என்பதால் அறநிலையத்துறைக்கு அதிக வருமானம் கிடைக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.

இதற்கிடையே தற்போது சதுரகிரி மலையில் குடிநீர் வசதி இல்லை. ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் தண்ணீர் இல்லை. அங்கே வாழும் குரங்கு உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. மேலும் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் இல்லை.போதாக்குறைக்கு தற்போது கோயிலில் உள்ள அன்னதான கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதிகமான முறைகேடுகள் நடப்பதால் அரசு அன்னதான கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு அங்கே உள்ள கடைகளில் தண்ணீர், சாப்பாடு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். தண்ணீர், சாப்பாடு உள்ளிட்ட பொருட்கள் ரூ.100க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தவண்ணம் இருந்தன. இதுசம்பந்தமாக பலமுறை புகார் தெரிவித்தும் கூட அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவே இல்லை.

தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் கோயிலுக்கு வருகை புரிந்தனர். ஆனால் போதுமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில் கோயிலில் என்னென்ன தேவைகள் உள்ளன மற்றும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணிந்திர ரெட்டி தலைமையில் அதிகாரிகள் சதுரகிரி கோயிலில் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று மாலை வரை இந்த ஆய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாகம் தீர்க்க இதை செய்வார்களா அவர்கள்? –சாமானியனின் குரல்

You'r reading உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை