ப.சிதம்பரத்தின் மேல் முறையீடு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை தள்ளுபடியாக வாய்ப்பு

டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு விட்டதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்புகளே அதிகம் என்று கூறப்படுகிறது.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு வருடத்திற்கு மேலாகவே முன் ஜாமீன் வழங்கி வந்தது.இந்நிலையில் கடந்த செவ்வாயன்று முன் ஜாமீனை திடீரென ரத்து செய்து விட்ட டெல்லி உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக போதிய முகாந்திரம் இருப்பதாகவும் கூறி விட்டது.

இதைத் தொடர்ந்து சிபிஐயும், அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்து விடத் துடித்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது. ப.சிதம்பரமும் 24 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் தலை காட்டாமல் பதுங்கினார். எனவே ப.சிதம்பரத்தை தேடப்படும் நபர் என அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் 2 நாட்களாக பெரும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.

இதனால் கைதை தவிர்க்க உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று விட கடந்த புதன்கிழமை ப.சிதம்பரம் தரப்பில் பகீரப் பிரயத்தன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மனு பட்டியலிடப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி நீதிபதி ரமணா வழக்கை விசாரிக்க மறுத்தார். அன்று முழுவதும் ப.சிதம்பரம் தரப்பில் பெரும் முயற்சிகள் எடுத்தும் வழக்கு விசாரணைக்கு வராமல், வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் என்று பட்டியலிடப்பட்டது.

இதனால் மேலும் வெளியில் தலை காட்டாமல் இருந்தால் விமர்சனங்கள் அதிகரிக்கும் என்பதால், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன் இரவு திடீரென பிரவேசித்த ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதன் பின்னர் அன்று இரவே ப.சிதம்பரம் அவருடைய வீட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். 5 முறை மத்திய அமைச்சராக இருந்த ஒருவரை சுவர் ஏறிக் குதித்து கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. தற்போது ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில், விசாரணை வளையத்தில் உள்ளார்.

இந்நிலையில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ப.சிதம்பரமோ, கைது செய்யப்பட்டு சிபிஐ காவலுக்கும் அனுப்பப்பட்டு விட்டதால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட வே அதிகம் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆனாலும் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் போது ப.சிதம்பரத்தை அவசரம் அவசரமாக கைது செய்ததும், சிபிஐ அவரை கைது செய்த விதத்திற்கு எதிராகவும் காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு காட்டப்படும் எனத் தெரிகிறது. இதனால் இந்த வழக்கில் இன்று பரபரப்பான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.