மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணியின் சரிவை மீட்ட ரஹானே

India scored 203/6 in the first test match against WI

by Nagaraj, Aug 23, 2019, 09:59 AM IST

ஆன்டிகுவாவில் தொடங்கியுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 25 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்தச் சரிவை அபார ஆட்டத்தின் மூலம் ரஹானே ஓரளவுக்கு சரிக்கட்ட, முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்றிரவு தொடங்கியது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள், பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.

மே.இ.வீரர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய அணியின் மயங்க் அகர்வால் (5), புஜாரா (2), கேப்டன் கோஹ்லி (9) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்ட 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது. அதன் பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் (44) அரைசதம் வாய்ப்பை தவறவிட்டு அவுட்டானார்.

இதன் பின் வந்த விஹாரி நிதானமாக ஆடி, ரஹானேவுக்கு ஒத்துழைக்க இந்திய அணியின் சரிவை சரிக்கட்டினர். இந்த ஜோடியும் 82 ரன்கள் சேர்க்க விஹாரி (32) ஆட்டமிழந்தார். அடுத்து நன்கு விளையாடிய ரஹானேவும் (81) சதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தொடர்ந்து ரிஷப் பண்ட் (20) ஜடேஜா (3) ஆகியோர் மேலும் விக்கெட் விழாமல் பொறுமையாக ஆடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் 68.5 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.மே.இ.தீவுகள் தரப்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களும் மழையின் குறுக்கீடு அதிகம் இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் போட்டி முழுமையாக நடைபெற்று முடிவு எட்டப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த சதியா? இ-மெயில் மிரட்டல் வெறும் புரளி - பிசிசிஐ தகவல்

You'r reading மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணியின் சரிவை மீட்ட ரஹானே Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை