வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

by Madhavan, May 4, 2021, 17:20 PM IST

கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2008 முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. தேர்தல் காரணமாக கடந்த ஆண்டுகளில் சிலமுறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. அதேப்போல் கடந்த ஆண்டு கொரோனா காரணமாகவும் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் நடந்தது. ஆனால், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இப்போதுதான் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இறுதிப்போட்டி மே 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இதனிடையே ஐபிஎல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் டெல்லி அணியின் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொல்கத்தா அணியை சேர்ந்த மேலும் 2 வீரர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை அணியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விரித்திமான் சஹாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மே 30ந்தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

You'r reading வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை