மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?

by Ari, May 4, 2021, 05:51 AM IST

டெல்லியில் நடந்த முந்தைய 2 லீக் ஆட்டங்களில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சையும், 4 விக்கெட் வித்தியாசத்தில் வலுவான சென்னை சூப்பர் கிங்சையும் அடுத்தடுத்து சாய்த்து அசத்தி இருக்கிறது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன் இலக்கை மும்பை அணி கடைசி பந்தில் விரட்டி பிடித்து கலக்கியது. அந்த அணியின் வீரர் பொல்லார்ட் கடைசி வரை களத்தில் நிலைத்து நின்று 34 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் பந்து வீச்சு மெச்சும் வகையில் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா 56 ரன்னும், தவால் குல்கர்னி 48 ரன்னும், டிரென்ட் பவுல்ட் 42 ரன்னும் வாரி வழங்கினார்கள். அத்துடன் பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) மும்பை அணியின் பந்து வீச்சு பாராட்டத்தக்கதாக அமையவில்லை. பவர்பிளேயில் இதுவரை அந்த அணி பவுலர்கள் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்கள். அதில் மும்பை அணி ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 6 தோல்வி கண்டு கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது. முதல் 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை தழுவியதை தொடர்ந்து அதிரடியாக கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அத்துடன் கடந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் அணியில் இருந்தும் கழற்றி விடப்பட்டார். ஆனாலும் அந்த அணிக்கு எதிர்பார்த்த முடிவு உடனடியாக கிடைக்கவில்லை. முந்தைய லீக் ஆட்டத்தில் புதிய கேப்டன்ஷிப்பில் அந்த அணி 55 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வீழ்ந்தது. ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் பேர்ஸ்டோவும், மனிஷ் பாண்டேவும், பவுலிங்கில் ரஷித் கானும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஐதராபாத் அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் வலுவான மும்பை அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர கச்சிதமாக செயல்பட்டால் மட்டுமே ஐதராபாத் அணியால் ஈடுகொடுக்க முடியும்.

You'r reading மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…? Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை