7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

by Ari, Apr 29, 2021, 06:16 AM IST

IPL கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

14 வது IPL சீசனில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி ஐதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களாமிறங்கினர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 7 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, மெதுவாக ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியில் மணிஷ் பாண்டே 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் 50 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் அதிரடி காட்டிய கேன் வில்லியம்சன் 26 ரன்களும், கேதர் ஜாதவ் 12 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் மற்றும் டூ பிளஸ்சிஸ் தங்களது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினர். கெய்க்வாட் 75 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 15 ரன்களும், அடுத்ததாக டூ பிளஸ்சி 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக ரன் சேர்த்த சுரேஷ் ரெய்னா 17 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் சென்னை அணி 18.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

You'r reading 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை