இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த சதியா? இ-மெயில் மிரட்டல் வெறும் புரளி - பிசிசிஐ தகவல்

by Nagaraj, Aug 19, 2019, 14:20 PM IST

மே.இ. தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த இ-மெயில் வெறும் புரளி என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று இரு தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. அடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் ஆன்டிகுவாவில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிக்கு, அடையாளம் தெரியாத பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை இ-மெயில் ஒன்று வந்தது. அதில் மே, இ.தீவுகளில் விளையாடி வரும் இந்திய அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த இமெயில் தகவலை உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியது.

அடுத்த 24 மணி நேரத்தில் அதே இமெயிலின் நகலை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் அனுப்பி வைத்தது. மெயில் வந்த தகவலை உறுதி செய்த பிசிசிஐ., அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்லங்கள் என்பது போல இருந்தாகவும் தகவல் தெரிவித்தது.
இதையடுத்த மத்திய அமைச்சரகம் மூலம் ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இந்திய வீரர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும்படி கிரிக்கெட் வாரியம் உஷார்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ., தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜாக்ரி கூறுகையில், மத்திய அமைச்சகத்துக்கு அந்த மிரட்டல் இமெயிலை அனுப்பினோம். அண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் படி தெரிவித்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் இ-மெயில் போலியானது என்றும், வெறும் புரளி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இமெயிலை முழுமையாக படித்து பார்க்கும் போது, யார் யாரையோ குறிப்பிட்டு, அனுப்பப்பட்டுள்ளது. அதுவே இது வெறும் புரளி என்பதை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இருந்தாலும் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.பி. சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் ; ராகுல் டிராவிட் நேரில் அஞ்சலி


Leave a reply