இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரவி சாஸ்திரி இருந்து வ கிறார். அவருடைய பதவிக் காலம் கடந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. ஆனால் தற்போது மே.இ.தீவுகள் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளதால், அவருடைய பதவிக் காலம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்சுமன் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சர்வதேச அளவில் முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹேசன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டாம் மூடி, மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பில் சிம்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின்சிங் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகிய 6 பேரை நேர்காணலுக்கு அழைக்க முடிவு செய்தது.
இதற்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகத்தில் கபில் தேவ் தலைமையில் இன்று நடைபெற்றது. மே.இ.தீவுகள் சுற்றுப் பயணத்தில் உள்ள ரவிசாஸ்திரியிடம் ஸ்கைப் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. பில் சிம்மன்ஸ் தவிர்த்து மற்ற 4 பேரும் நேர்காணலில் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த கபில்தேவ், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2021-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடர் வரை ரவி சாஸ்திரி இந்தப் பதவியில் நீடிப்பார் என்றும் கபில்தேவ் அறிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளில், உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் கோட்டை விட்டது ஒன்றைத் தவிர, டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட காரணம் என்றும் கூறப்படுகிறது. 100 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற நேர்காணலில் ரவி சாஸ்திரிக்கு கடும் போட்டியாளர்களாக மைக் ஹேசன், டாம் மூடி ஆகியோர் இருந்ததாகவும், ரவி சாஸ்திரியை தேர்வு செய்ததன் பின்னணியில் இந்திய கேப்டன் கோஹ்லி உள்ளிட்ட யாருடைய சிபாரிசும் இல்லை என்றும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.