அமேசான் இந்தியா தளம் மூலம் பொருள்களை வாங்கும் இந்தி மொழி தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்தி மொழியில் இணையவழி உரையாடல் மூலம் வழிகாட்டக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திர வழி கற்றல் (எம்எல்) போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயங்கக்கூடிய இந்த அரட்டை பட்டியில் வாடிக்கையாளர் சேவை பிரிவு அலுவலரிடம் சந்தேகங்களை கேட்பதுபோன்றே கேள்விகளை எழுப்பலாம் என்று அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் செயலியை பயன்படுத்தும் இந்தி மொழி தெரிந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களை போக்கிக்கொள்ள இதை பயன்படுத்த முடியும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை மைய அலுவலரை அணுகுவதற்கு முன்பு பெரும்பாலான சந்தேகங்களை இதன் மூலம் தீர்த்துக்கொள்ள இயலும்.
தானியங்கி முறை வாடிக்கையாளர் குறைதீர் சேவையான அமேசான் அசிஸ்டெண்ட், ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கிறது.
கடந்த ஆண்டு அமேசான் ஆண்ட்ராய்டு செயலி மற்றும் மொபைல் இணையதளம் ஆகியவற்றின் பயனர்களுக்கு உதவும்படி இந்தி மொழி வாடிக்கையாளர் சேவை பிரிவை ஆரம்பித்தது. சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோ இந்தி மொழி சந்தாதாரர்களுக்கு உதவ பயனர் இடைமுகம் (யூஐ) ஒன்றை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.