உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் : இந்தியா vs மே.இ.தீவுகள் இன்று முதல் மோதல்

World test championship , India vs WI first match today at Antigua

by Nagaraj, Aug 22, 2019, 11:44 AM IST

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று பங்கேற்கிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதல் போட்டியாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளதால், முதல் வெற்றியை சுவைக்க இரு அணிகளுமே பலப்பரீட்சைக்கு தயாராகியுள்ளன.

கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மே.இ.தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையில், 2-0 என அபார வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று மாலை 7 மணிக்கு ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. ஐ.சி.சி முதல் முறையாக அறிமுகம் செய்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கும் இந்த இரு போட்டிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இதனால் இன்றைய முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது பற்றிய சில விபரங்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 1-ந்தேதி தொடங்கி வரும் 2021 ஏப்ரல் மாதம் வரை என 2 ஆண்டுகள் வரை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணிகளும் ஏதாவது 3 அணிகளுடன் உள்ளூர், வெளிநாடு என குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்கும். குறைந்தது 2 அதிகபட்சம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருக்க வேண்டும்.ஒரு தொடருக்கு மொத்தம் 120 புள்ளிகள் தரப்படும். தொடரில் நடக்கும் போட்டிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, புள்ளிகள் மாறுபடும்.

மழை அல்லது வேறு காரணத்துக்காக போட்டி கைவிடப்பட்டால், 'டிரா' ஆனதாக கணக்கில் கொள்ளப்பட்டு, புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். இந்தியா, மே.இ.தீவுகள் அணிகள் இரு போட்டிகள் கொண்ட இத் தொடரில் மோதுகின்றன. இதனால் ஒரு டெஸ்டில் வென்றால் 60 புள்ளி பெறலாம். 'டிரா' செய்தால் 20 புள்ளி, 'டை' ஆனால் 30 புள்ளி பெறலாம். இரு டெஸ்டில் வென்றால் 120 புள்ளிகள் கிடைக்கும்.

லீக் முறையில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பல அணிகள் சம புள்ளிகள் பெற்றால், வென்ற தொடர்கள், எடுத்த ரன்கள், வீழ்த்திய விக்கெட்டுகள் என பலவும் கணக்கிடப்பட்டு, பைனலில் மோதும் 'டாப் இரு அணிகள் முடிவு செய்யப்படும். பைனல் 'டிரா' அல்லது 'டை' ஆனால், கோப்பை பகிர்ந்து தரப்படும்.

இன்று இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதன் முறையாக களமிறங்குகிறது. வெள்ளை நிற ஜெர்சியில் இந்திய வீரர்கள் முதன் முறையாக தங்களது எண் பொறித்த ஜெர்சியில் களமிறங்குகின்றனர்.

இந்திய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் கேப்டன் கோஹ்லி மேலும் ஒரு சாதனை படைக்க வாய்ப்புள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகள் தேடித் தந்த கேப்டன்கள் வரிசையில் தோனி,60 போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார். 46 போட்டிகளில் விளையாடி 26 போட்டிகளில் வெற்றியை தேடித் தந்துள்ள தற்போதைய கேப்டன் கோஹ்லி 2-வது இடத்தில் உள்ளார். இன்றைய முதல் டெஸ்டில் வென்றால் தோனியின் சாதனையை கோஹ்லி சமன் செய்யலாம்.

இன்றைய முதல் டெஸ்ட் போட்டி மழையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று வானிலை நிலவரம் அச்சுறுத்துகிறது. ஆன்டிகுவாவில் போட்டி நடைபெறும் ஐந்து நாட்களிலும் மழை வர 81 சதவீதம் வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்சம் 88 சதவீதம் வரை மழை வரலாம் என்பதால் போட்டி முழுமையாக நடப்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

You'r reading உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் : இந்தியா vs மே.இ.தீவுகள் இன்று முதல் மோதல் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை