ப.சிதம்பரத்தை கைது செய்தது பாஜக அரசின் அரசியல் ரீதியிலான பழி வாங்கும் நடவடிக்கை என்றும், அரசுக்கு எதிரான அவரின் குரலை நெறிக்கும் முயற்சி தான் இது எனவும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்றிரவு சிபிஐ அதிரடியாக கைது செய்தது. ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் இன்று சென்னையிலிருந்து டெல்லிக்கு வந்தார். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூறுகையில், சிபிஐ தரப்பு அனுப்பிய அனைத்து சம்மன்களுக்கும் ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார். என் தந்தை எங்கும் தலைமறைவாகவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையே எனது தந்தை கைது. அரசுக்கு எதிரான அவரின் குரலை நெரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது.
மேலும் காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்பும் செயலாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும், என் தந்தை ப. சிதம்பரத்திற்கும் உள்ள நற்பெயரை கெடுக்கவும் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையும் கூட. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் .
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக எனக்கும் 20 முறை சம்மன் வந்து ஆஜராகியுள்ளேன். 4 முறை எனது வீடுகளில் சோதனையும் நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அதே போல் ஐஎன்எக்ஸ் மீடியாவைச் சேர்ந்த பீட்டர் முகர்ஜியையோ, இந்திராணி முகர்ஜியையோ அல்லது அந்த நிறுவனத்தின் வேறு யாரைமே நான் இதுவரை சந்தித்தது இல்லை எனவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்