ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இதனால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்திலும் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதில் தாமதமானது. இதனால் கடந்த புதன்கிழமை இரவு, ப.சிதம்பரத்தை அவருடைய வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 4 நாட்கள் (இன்று வரை) சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ப.சிதம்பரத்திற்கு
காவல் நீட்டிப்பு கேட்டு சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவும் இன்று மீண்டும் விசாரணை நடக்கவிருக்கிறது .கடந்த வெள்ளிக்கிழமையே ப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதை காரணம் காட்டி, மனுவை விசாரிக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது சிபிஐ காவலுக்கு மீண்டும் அனுமதி கொடுக்கப்படுமா?அல்லது சிறைக்கு அனுப்பப்படுவாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்று விடை கிடைக்கும் என்பதால், ப.சிதம்பரம் மீதான வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.