பெங்களூரு: ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டம் ஹனுமந்தபுரா கிராமம் பகுதியை சேர்ந்தவர் நாகஸ்ரீ (25). இவருக்கு திருமணமாகி நவ்யாஸ்ரீ (5), திவ்யாஸ்ரீ (3) மற்றும் இரண்டரை மாத பெண் குழந்தை என மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றுப் பகுதிக்கு தனது மகள்களுடன் நாகஸ்ரீ சென்றுள்ளார். பின்னர், அங்கு திடீரென மூன்று மகள்களையும் அடுத்தடுத்து கிணற்றுக்குளு தள்ளி கொன்றுவிட்டு நாநகஸ்ரீயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார்.
நாகஸ்ரீ குழந்தைகளுடன் வெகுநேரம் ஆகியும் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது தான், நாகஸ்ரீ மற்றும் குழந்தைகள் கிணற்றில் குதித்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினருடன் விரைந்தனர். அங்கு, கிணற்றுக்குள் இருந்து நாகஸ்ரீ மற்றும் மூன்று குழந்தைகளையும் போலீசார் சடலமாக மீட்டனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நாகஸ்ரீயின் கணவர் வீட்டில் ஆண் குழந்தை தான் வேண்டும் என வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால், நாகஸ்ரீக்கு முதல் இரண்டும் பெண் குழந்தைகளாகவே பிறந்தது. மூன்றாவதாக பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்துள்ளனர். ஆனால், மூன்றாவதும் பெண் குழந்தையே பிறந்ததால் நாகஸ்ரீ விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் தான், நாகஸ்ரீ தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.