ஓட்டுக்காக அரசியல் செய்யக்கூடாது - காவிரி தீர்ப்பு குறித்து விஜயகாந்த் பளீச்

காவிரி பிரச்சினையை வைத்து இருமாநிலங்களில் ஓட்டுக்காக அரசியல் செய்யக்கூடாது, ஏனென்றால் காவிரி தண்ணீர் பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையே உள்ள மக்கள் பிரச்சனையாக மாறக்கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Feb 17, 2018, 12:05 PM IST

காவிரி பிரச்சினையை வைத்து இருமாநிலங்களில் ஓட்டுக்காக அரசியல் செய்யக்கூடாது, ஏனென்றால் காவிரி தண்ணீர் பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையே உள்ள மக்கள் பிரச்சனையாக மாறக்கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், “இன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு 14.75 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். இந்த தீர்ப்பு தமிழக மக்களால் ஏற்றுகொள்ள முடியாத தீர்ப்பாகும், ஆனாலும் தண்ணீர் என்பது எந்த மாநிலத்திற்கும் நிரந்தர சொந்தம் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலே வரவேற்கத்தக்கது.

காவிரி பிரச்சினையை வைத்து இருமாநிலங்களில் ஓட்டுக்காக அரசியல் செய்யக்கூடாது, ஏனென்றால் காவிரி தண்ணீர் பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையே உள்ள மக்கள் பிரச்சனையாக மாறக்கூடாது. அதேபோல ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் வரும்போதெல்லாம் இந்த பிரச்சனை பல ஆண்டுகாலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த பிரச்சனைக்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை.

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பதுதான், எப்படி தேசிய நெடுஞ்சாலைகள் என்பது எல்லா மாநிலங்களுக்கும் சமமாக இணைப்பு சாலைகளாக இருக்கிறதோ, அதேபோல அனைத்து நதிகளையும் எல்லா மாநிலங்களுக்கும் சமமாக இணைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா முழுவதும் எங்கும் வறட்சி இல்லாமலும் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்து சமநிலையாக அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையில் 3.75 டி.எம்.சி தண்ணீரும் தமிழகம் முழுவதும் 88 டி.எம்.சி தண்ணீரூம் வீணாக கடலில் கலந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த தண்ணீரை சேமிப்பதற்கு கடந்த ஆண்டு தமிழக அரசு நீர்நிலைகளை சீர்செய்வதற்கு பல கோடி நிதியை ஒதுக்கியது.

ஆனால் அந்த நிதியை கொண்டு குளம், குட்டை, ஏரி, வாய்க்கால்களை தரமான முறையில் சரி வர தூர்வாறாததால் மழையின் மூலம் கிடைக்கும் நீர் சரியாக சேமிக்க முடியாமல் வருடம்தோறும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆகவே நமக்கு கிடைக்கும் மழைநீரை சரியாக சேமித்து வைத்திருந்தாலே அண்டை மாநிலங்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.

மத்திய அரசு, மாநிலங்களுக்கிடையே வஞ்சனையை பார்க்காமல் நடுநிலையோடு அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக பார்க்கவேண்டும், காவிரி பிரச்னையை பொறுத்தவரை நதிகள் இணைப்புதான் நிரந்தர தீர்வாக அமையும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading ஓட்டுக்காக அரசியல் செய்யக்கூடாது - காவிரி தீர்ப்பு குறித்து விஜயகாந்த் பளீச் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை