ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரின் கை விரல்களை துண்டாக்கிவிட்டு தப்பிய சக மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் மாணவர்களால் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மதுரையில் ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரின் கை விரல்களை சக மாணவர்கள் கத்தியால் வெட்டி துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அருகே திருவாதவூர் என்ற பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, அர்ஜூன் என்ற மாணவர் வணிகவியல் பிரிவில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், அர்ஜூன் இன்று பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுள்ளான். அங்கு, அர்ஜூனுக்கும் சக மாணவர்களான கார்த்திக் ராஜா மற்றும் சரவணக்குமார் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சக மாணவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அர்ஜூனை தாக்கினர். இதில், அர்ஜூனின் கை விரல்கள் துண்டானது. மேலும், தலை, மணிக்கட்டு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ரத்த காயத்தில் மயங்கி விழுந்த அர்ஜூனை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அர்ஜூனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கார்த்திக் ராஜா, சரவணக் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.