திருவனந்தபுரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த இரண்டு பலாத்கார சம்பவங்கள் இதைத் தான் காட்டுகிறது. பத்தனம் திட்டா அருகே கொரோனா பாதித்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு கொண்டு சென்றபோது அதன் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாகக் கூறி ஒரு சுகாதார ஆய்வாளர் இளம் பெண்ணை தனது வீட்டுக்கு வரவழைத்துக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவனந்தபுரம் அருகே கோயிலுக்குப் பெற்றோருடன் சாமி கும்பிட சென்ற ஒரு சிறுமியைப் பூசாரியே மானபங்கம் செய்ய முயன்றது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின்கீழ் முடப்புரம் என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற ஒரு கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஸ்ரீ குமார் நம்பூதிரி (38) என்பவர் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் இக்கோயிலுக்கு நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி தனது தாயுடன் சாமி கும்பிட சென்றார். தனது மகளுக்குப் பூஜித்த கயிறு தருமாறு அந்த சிறுமியின் தாய் பூசாரியிடம் கேட்டிருந்தார்.தன்னுடைய அறைக்கு வந்தால் கயிறு தருவதாகப் பூசாரி ஸ்ரீ குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து கயிற்றை வாங்குவதற்காக அந்த சிறுமியை அவரது தாய் அனுப்பி வைத்தார். பூசாரியின் திட்டத்தைத் தெரியாத அந்த சிறுமியும் கயிறு வாங்குவதற்காக அவரது அறைக்குச் சென்றார். அப்போது அவர் தனது அறைக்குள் வைத்து அந்த சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் பயந்த அந்த சிறுமி அலறினார். சத்தத்தைக் கேட்டு அந்த சிறுமியின் தாய் பதற்றத்துடன் சென்று பார்த்தபோது பூசாரி அந்த சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து சிறையின்கீழ் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரி ஸ்ரீகுமார் நம்பூதிரியைக் கைது செய்தனர். கேரளாவில் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற பலாத்கார சம்பவங்கள் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.