திருவனந்தபுரம் அருகே கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் பெண் நோயாளிகள் குளிப்பதை ஒளிந்திருந்து செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஆவார்.
கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று முதன் முதலாக நோயாளிகள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதை தொடர்ந்து பல பகுதிகளில் கல்லூரி விடுதிகள் மற்றும் மண்டபங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி திருவனந்தபுரம் அருகே உள்ள பாறைசாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பார்மசி கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண்கள் வார்டை ஒட்டித்தான் ஆண்கள் வார்டும் உள்ளது.
இந்நிலையில் பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண் இன்று மாலை குளிப்பதற்காக அங்குள்ள குளியலறைக்குச் சென்றார். அப்போது குளியலறை ஜன்னலில் ஒரு செல்போன் தெரிவதை அவர் பார்த்தார். அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூக்குரலிட்டார். சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து விசாரித்தனர்.
அப்போது, தான் குளிப்பதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததாக அவர் கூறினார். இதையடுத்து குளியலறையின் பின்பக்கம் சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் அங்கிருந்து ஓடுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்ததில், அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கல் என்ற பகுதியைச் சேர்ந்த சாலு (26) என தெரியவந்தது. இவர் செங்கல் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (டிஒய்எப்ஐ) தலைவராக இருக்கிறார். இதுகுறித்து பாறசாலை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அருகே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் பலாத்காரம் செய்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கொரோனா மருத்துவமனையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.