ஒடிஷாவில் கொரோனாவுக்கு போலி தடுப்பு மருந்து தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, உள்பட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் இதுவரை நடந்த சோதனைகள் எதுவும் முழு வெற்றி பெறவில்லை. இவ்வருடமே தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விடுவோம் என்று ரஷ்யா, சீனா உள்பட சில நாடுகள் கூறி வருகின்ற போதிலும் அதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
இதற்கிடையே சில இடங்களில் நாங்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என்று கூறி சிலர் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல ஒடிஷா மாநிலத்தில் புவனேஸ்வர் அருகே ஒருவர் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை தயாரித்துள்ளதாக கூறி அதை விற்பனை செய்ய முயற்சிப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பார்கட் மாவட்டத்தை சேர்ந்த பிரஹ்லாத் பிசி (32) என்பவர் தான் போலி தடுப்பு மருந்தை தயாரித்து வருவதாக தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஒரு அறையில் ஏராளமான மருந்து பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் கொரோனா தடுப்பு மருந்து என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் மருந்து தயாரிக்க பயன்படுத்திய ரசாயன பொருட்களையும் கைப்பற்றினர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாக கூறிய இவர், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.