யூடியூபில் பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டவர் மீது தாக்குதல் நடத்திய சினிமா பெண் டப்பிங் கலைஞர் உள்பட 3 பெண்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய் பி. நாயர் என்பவர் கடந்த சில நாட்களாக தனது யூடியூப் சேனலில் பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சில பெண்கள் நல அமைப்பினர் போலீசிலும், மகளிர் ஆணையம் மற்றும் சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்தனர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரபல மலையாள சினிமா டப்பிங் கலைஞரான பாக்யலட்சுமி தலைமையில் தியா சனா, ஸ்ரீலட்சுமி ஆகிய 3 பெண்கள் திருவனந்தபுரத்தில் விஜய் நாயர் தங்கியுள்ள அறைக்கு சென்றனர்.
அறைக்குள் அதிரடியாக புகுந்த அவர்கள், விஜய் நாயர் மீது கழிவு ஆயிலை ஊற்றி அவரை தாக்கினர். பின் அவரது லேப்டாப் மற்றும் செல்போனையும் கைப்பற்றினர். இந்த காட்சிகளை நேரடியாக பேஸ்புக்கிலும் ஒளிபரப்பினர். இந்த சம்பவம் நேற்று கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இனி யூடியூபில் இதுபோல பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை பதிவிட மாட்டேன் என்று கூறி விஜய் நாயர் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் தன்னை தாக்கி செல்போன் மற்றும் லேப்டாப்பை பறித்து சென்ற 3 பெண்களுக்கு எதிராக விஜய் நாயர் திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி உள்பட 3 பெண்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து பாக்யலட்சுமி கூறுகையில், பெண்களை அவமதிக்கும் வகையில் யூடியூபில் கருத்துக்களை பதிவிட்டு வந்த விஜய் நாயருக்கு எதிராக பலமுறை போலீசிலும், மகளிர் ஆணையத்திலும் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த வீடியோக்களை தாங்கள் பார்க்கவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் தான் நாங்கள் இந்த செயலில் ஈடுபட்டோம். நமது தாய்மார்கள், மற்றும் சகோதரிகளுக்காகவே இந்த காரியத்தில் நாங்கள் ஈடுபட்டோம். சட்ட நடவடிக்கை எங்களுக்கு எதிராக வரும் என்று தெரிந்தே தான் இதை செய்தோம். இந்த நல்ல செயலுக்காக சிறைக்கு செல்லவும் எங்களுக்கு பயமில்லை என்று கூறினார்.