மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொன்றதாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம், பலமு மாவட்டத்தில் பிஸ்ராம்பூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது ராஜ்ஹரா என்ற கிராமம். இந்தக் கிராமத்தை சேர்ந்தவர் ஆசிஷ் பாண்டே. இவர் தம் மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லை என்று போலீஸிடம் புகார் செய்தார். அவரே புகார் செய்ததால் காவல்துறை அவரை சந்தேகிக்கவில்லை. ஆனால் விசாரணையின்போது ஆசிஷ் பாண்டே தமது மனைவி சோனி தேவி (வயது 25), மகள் சம்ரிதி (வயது 5), மகன் சம்தர்ஷி (வயது 3) ஆகியோரை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மனைவியையும் பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்று அவர்கள் சடலங்களை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள கிணற்றில் போட்டுவிட்டதாக ஆசிரியர் ஆசிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். அவரது தகவலின்பேரில் போலீசார் உடல்களை கைப்பற்றியுள்ளனர். 2014ம் ஆண்டு திருமணம் நடந்ததிலிருந்தே வரதட்சணையாக நிலத்தை தரவேண்டும் என்று தம் மகள் சோனி தேவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்தததாக மருமகன் ஆசிஷ் பாண்டே, அவரது பெற்றோர், அண்ணன் மற்றும் அண்ணன் மனைவி ஆகியோர் மீது கொலையுண்ட சோனி தேவியின் தந்தை புகாரளித்துள்ளார். பிஸ்ராம்பூர் போலீசார் ஆசிஷ் பாண்டேவையும் அவரது குடும்பத்தினர் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.