ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்காக போலியாக 2 செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பொத்திபாளையத்தைச் சேர்ந்தவர் யுவராஜா(32). இவர் காரக்பூரில் உள்ள ஐஐடியில் எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். யுவராஜா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ரயில்வே தட்கல் முன் பதிவுக்காக போலியாக சூப்பர் தட்கல், சூப்பர் தட்கல் புரோ என்ற இரு செயலிகளை உருவாக்கியுள்ளார். இந்த செயலி மூலம் ரயில்வே தட்கல் முன்பதிவை வேகமாக மேற்கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார். இந்த செயலியை சுமார் ஒரு லட்சம் பேர் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலமாக யுவராஜ் ரூ.20 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
யுவராஜா கடந்த மார்ச் மாதம் வரை பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதன் பிறகு இரு செயலிகளையும் அவர் அப்டேட் செய்தபோது அதை பதிவிறக்கம் செய்து பலருக்கும் அது போலி செயலி என்பது தெரியவந்ததது. இதையடுத்து வந்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள ரயில்வே சைபர் கிரைம் போலீசார் மற்றும் திருப்பூர் ரயில்வே பாதுகாப்புப்படையினர் அவரை கைது செய்துள்ளனர்.